Skip to main content

கடைசி போட்டியில் சதம்... விடை பெற்றார் கம்பீர்...

Published on 10/12/2018 | Edited on 10/12/2018

ஆந்திராவுக்கு எதிரான ரஞ்சி போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக கடந்த வாரம் அறிவித்தார் கவுதம் கம்பீர். ஆந்திராவுக்கு எதிரான தனது கடைசி போட்டியில் சதம் விளாசினார். 10 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் குவித்தார். முதல் தரப்போட்டிகளில் இது அவரது 43-வது சதமாகும்.

 

gg

 

 

கம்பீர் இதுவரை 198 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். 331 இன்னிங்ஸ் விளையாடி 15,153 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 68 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 233*. 24 முறை நாட் அவுட் பேட்ஸ்மேன். 107 கேட்ச்கள் பிடித்துள்ளார். இந்த நிலையில் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார் கம்பீர்.

 

2012 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு சிபி தொடரில் தோனி எடுத்த முடிவுகள் அதிர்ச்சிகரமாக இருந்ததாக கம்பீர் தெரிவித்துள்ளார். அந்தத் தொடரில் கம்பீர், விரேந்தர் சேவாக், சச்சின் டெண்டுல்கர் ஆகிய மூன்று தொடக்க ஆட்டகாரர்களுடன் சென்று இருந்தது இந்திய அணி. "2015 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு மூவரையும் இந்தத் தொடரில் விளையாட முடியாது என்று தோனி அறிவித்தார். இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. எந்த கிரிக்கெட் வீரருக்கும் இது பெரும் அதிர்ச்சி தரும் என்று நான் நினைக்கிறேன்” என்று கம்பீர் கூறியுள்ளார். “எம்.எஸ் தோனிக்கும் எனக்கும்  தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லை, இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன” என்றும் அவர் தெரிவித்தார். அந்தத் தொடரில் 308 ரன்கள் விளாசி இருந்தார் கம்பீர். கோலிக்கு அடுத்ததாக அந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர் கம்பீர் என்பது கவனிக்கத்தக்கது.

 

நாட்டின் துணிச்சலான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான கம்பீர் இந்திய சமுதாயம் பொதுவாக தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக பேசுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். "தவறான காரியங்களையும், செயற்கைத் தன்மையையும் என்னால் சகித்துக்கொள்ள முடியாது. என்னைச் சுற்றி நிறைய பேர் என்னிடம் ராஜதந்திரமாக இருந்திருக்கலாம், ஆனால் நான் அதுமாதிரி இல்லை. ஆம், நான் பல எதிரிகளைச் சேர்த்தேன், ஆனால் நான் நிம்மதியாக உறங்கினேன்" என்று மனம் திறந்துள்ளார் கம்பீர்.

 

“என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் பல கேப்டன்களிடம் விளையாடி உள்ளேன். அதில் அனில் கும்ப்ளேதான் சிறந்த கேப்டன். அவர் ஒரு மிகச்சிறந்த தலைவர். அவர் எனக்கு ஒரு ரோல் மாடல். அது எனக்கு ஐ.பி.எல். போட்டிகளின்போது மிகவும் உதவியது” என்று சிறந்த கேப்டன் பற்றி கூறினார் கம்பீர். கும்ப்ளே கேப்டனாக இருந்தபோது ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றது. கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. ஆனால் கோலியுடன் கருத்து வேறுபாடு காரணமாக தன் பதவியை ராஜினாமா செய்தார் கும்ப்ளே என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

gg

 

 

ஜூனியர் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை அழிக்க முயற்சி செய்வதாக  2017-ல் கம்பீர், கே.பி.பாஸ்கரிடம் முறையிட்டார். நவ்தீப் சைனி என்ற வீரருக்காக சேத்தன் சவுகானிடம் வாதங்களை வைத்துள்ளார். பெரிய அளவில் ஆடாத ஒரு வீரரை டெல்லி ரஞ்சி அணியில் சேர்க்க தேர்வாளர் முயன்றபோது அதை கம்பீர் எதிர்த்தார். அமைப்புகள் தன்னுடைய நிலையிலிருந்து தவறும்போது அதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார் கம்பீர். அவரின் இந்த செயல்பாடு அவரது கிரிக்கெட் வாழ்க்கையை பாதித்ததாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

 

"நான் பணக்கார பின்னணியில் இருந்து வந்ததால் விளையாட்டை விளையாட வேண்டிய அவசியம் இல்லை என்று நிறைய பேர் கூறுவார்கள். ஆனால் என் சொந்த அடையாளத்தை வைத்திருக்க விரும்பினேன். என் அப்பாவை என் மூலம் அறிய வேண்டும் என விரும்பினேன்.” என்றார் கம்பீர். 

 

ட்விட்டரில் 8.63 மில்லியன் பேர் கம்பீரை பின்தொடர்கின்றனர். பல அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளில் கம்பீர் தனது வலுவான கருத்துக்களை தெரிவித்துவருகிறார். அதற்கு வரும் கலவையான எதிர்வினைகளை பற்றி அவர் கவலைப்படுவதில்லை. தேசிய தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாட்டின் அச்சுறுத்தலைத் தடுக்க தவறிய டெல்லி அரசாங்கத்தை சமீபத்தில் விமர்சித்தார்.

 

"நான் யாரையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு விமர்சனங்களை வைப்பதில்லை. நான் விமர்சிப்பதை எந்தத் திட்டத்துடனும் செய்யவில்லை. அது எனக்கு இயல்பாகவே வருகிறது. நான் சமூக பிரச்சினைகளை எழுப்ப விரும்புகிறேன். ஒரு விஷயம் சரியாக நடைபெறாதபோது கேள்வி கேட்பது என் உரிமையென நினைக்கிறேன். ஒவ்வொரு இந்தியரும் இதைச் செய்யும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில் நாம் அந்த அமைப்புமுறையால் பாதிக்கப்படுவோம்" என்று கம்பீர் கூறியுள்ளார். 

 

“நான் நேர்மையாக இருக்க நினைக்கிறேன். அதனால் எந்த நிர்வாகத்திலும் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் பயிற்சியாளராக வாய்ப்புகள் உண்டு. பெரிய கனவுகளுடன் உள்ள இளைஞர்களுக்கு அது உதவும்” என்று தனது அடுத்த கட்ட நகர்வைப் பற்றித் தெரிவித்தார்.