Skip to main content

உலகை தன் பக்கம் திரும்ப வைத்த குத்தகை விவசாயின் மகள்...

Published on 01/12/2018 | Edited on 01/12/2018

இந்தியாவில் கிரிக்கெட் பிரபலத்தில் உள்ள அளவில், ஒரு ஐந்து சதவீதம்கூட மற்ற எந்த விளையாட்டும் பிரபலத்தில் இல்லை. இதற்கு வணிகம் முதற்கொண்டு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், இங்கு மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், கிரிக்கெட்டில் குறைந்த அளவு பின்னணி கொண்ட ஒரு வீரரை தெரிந்த அளவுகூட, மற்ற விளையாட்டுகளில் உலக அளவில் சாதனை புரிந்த இந்திய வீரர்களை நாம் அறிந்திருக்கவில்லை. 

 

mm

 

 

கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வென்றாலும், தோற்றாலும் அது பட்டிதொட்டி வரை பரவும். ஆனால், மேரி கோம் போன்ற உலக சாம்பியன்கள் இன்னும் பிரபலமாகவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். இப்படி ஒரு சாதனையாளர் இந்தியாவில் இருக்கிறார் என்பதே பலருக்கு தெரியாது. அவர் தன்னுடைய வாழ்வில் பல கடினமான சோதனைகளையும், கரடுமுரடான பாதைகளையும் கடந்துதான் இன்று உலகின் சிறந்த குத்துச்சண்டை வீராங்கனை என்ற இடத்தை அடைந்துள்ளார். 

 

இந்தியாவின் ஏழ்மை மாநிலங்களில் ஒன்றான மணிப்புரை சேர்ந்தவர் மேரி கோம். இவருடைய பெற்றோர் குத்தகை விவசாயம் செய்து வந்தனர். கோம் பள்ளிக்கு செல்லும்போதே தனது பெற்றோருக்கு தொழில்களில் உதவிவந்தார். அவரின் தந்தை முன்னாள் மல்யுத்த வீரர். பள்ளிகாலங்களிலேயே கோம் கைப்பந்து, கால்பந்து மற்றும் தடகள விளையாட்டு உட்பட பல வகையான விளையாட்டுக்களில் பங்கு பெற்றுவந்தார். டிங்கோ சிங் என்ற புகழ்பெற்ற இந்திய குத்துச்சண்டை வீரரின் சாதனைகளையும்,  முஹம்மது அலி வீடியோக்களைப் பார்த்தும் தன்னுடைய விருப்பத்தை தடகளத்திலிருந்து குத்துச்சண்டைக்கு மாற்றினார். 

 

2000-ஆம் ஆண்டிலிருந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். மாநில அளவிலான சாம்பியன்ஷிப்பை வென்றார். ஆனால் அதுவரை அவர் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டதையும், போட்டிகளில் பங்கேற்பதையும் வீட்டிற்க்கு சொல்லவில்லை. குத்துச்சண்டை மிகவும் ஆபத்தான விளையாட்டு எனவும், காயங்களின் ஆபத்து அதிகமாக இருக்கும் எனவும் பெற்றோர் கருதினர். அவரது மாநில அளவிலான சாம்பியன்ஷிப் வெற்றிப் படங்களின் ஆவணங்களை செய்தித்தாள்களில் பார்த்தார் கோமின் தந்தை. கோமின் இந்த விருப்பத்திற்கு எதிரான மனநிலையில் அவரது தந்தை இருந்தார். ஆனால், மேரி கோம் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கும் விருப்பத்தை மாற்றுவதாக இல்லை, பிடிவாதமாக இருந்தார். பெற்றோரை தன்வழிக்கு மாற்றினார். இறுதியில் தன்னுடைய பெற்றோரின் சம்மதத்துடன் போட்டிகளில் பங்கேற்றார். 

 

 

mm

 

 

2001-ல் AIBA பெண்கள் உலக சாம்பியன்ஷிப் 48 கிலோ எடைப்பிரிவில் இரண்டாம் இடம் பெற்றார். அதே சாம்பியன்ஷிப் 45 கிலோ எடைப்பிரிவில் 2002-ல் முதல் இடம் பெற்று சாதித்தார். அன்று முதல் இன்றுவரை சாதனைகளை சர்வசாதரணமாக புரிய தொடங்கினார். சென்ற வாரம் உலக மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இடம் பிடித்தார். இது ஆறாவது முறையாக அவர்  உலக மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் பெறும் தங்கம் ஆகும். உலக மகளிர் குத்துச்சண்டை போட்டிகளில் அவருக்கு இணை யாரும் இல்லை என்ற அளவிற்கு அவர் உயர்ந்துள்ளார். 

 

கோமின் இந்த சாதனைகள் எளிதாக படைக்கப்படவில்லை. “நான் பாக்ஸிங் உலகில் அடியெடுத்து வைத்தபோது என்னுடைய முயற்சிகளை கேலி கிண்டல் செய்தவர்கள் அதிகம். ஒருபோதும் சாம்பியன் ஆக முடியாது. பெண்களால் பாக்ஸிங்கில் சாதிக்க முடியாது என்று கூறியவர்கள் ஏராளம். நான் தோல்வியுறும்போது என்னுடைய கதை முடிந்தது என்பார்கள். வெற்றிபெறும்போது அமைதி காப்பார்கள்” என்று மேரி கோம் ஒருமுறை தெரிவித்திருந்தார். 

 

ஒவ்வொரு முறையும் தனது திறமையையும், வலிமையையும் வெளிப்படுத்தி வந்தார். மகளிர் குத்துச்சண்டை இன்னும் பெரிய அளவில் அறியப்படாத நேரத்தில், மேரி தனது ஆர்வத்தை தொடர்ந்து இடைவிடாமல் உறுதியுடன் வெளிப்படுத்தி வந்துள்ளார். “நான் ஐந்து முறை உலக சாம்பியனாக இருக்கிறேன், ஆனால் எனக்கு இன்னும் தகுதியுற்ற ஸ்பான்ஸர் இல்லை; இந்தியாவில் பெருநிறுவன ஊக்கமளிப்பு அரிதானது அல்ல. ஒரு மனிதனாக மற்ற விளையாட்டு வீரர்கள் பெரும் நிதியுதவி அளவுக்கு தமக்கு கிடைக்காதபோது நான் வருத்தப்படுகிறேன்." என்று அவர் ஐந்தாவது முறை சாம்பியனானபோது கூறினார். 

 

மேரி ஆறு முறை உலக சாம்பியன். 2014-ல் இவரின் வாழ்க்கை படமாக வெளியிடப்பட்டது. அதில் மேரி கோமாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். பத்ம பூஷன், அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ போன்ற விருதுகளை பெற்றுள்ளார். ஏப்ரல் 26, 2016 அன்று, கோம் இந்திய ராஜ்யசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதுபோன்ற பல விஷ்யங்களை சில இந்தியர்கள் மட்டுமே அறிவார்கள்.

 

மேரியின் உறுதியான தன்னம்பிக்கையை குறைப்பதற்காக மட்டுமே பல விமர்சனங்கள் வந்தன. ஆனால் விமர்சனங்கள், ஏழ்மை ஆகியவற்றை தாண்டி ஆர்வம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டியுள்ளார். சச்சினும், கோலியும் கிரிக்கெட்டில் சாதித்த அளவுக்கு, மேரி கோமும் குத்துச்சண்டையில் சாதித்துள்ளார். இன்றைய தலைமுறைக்கும், வருங்கால தலைமுறைக்கும் அவர் ஒரு ரோல் மாடல். அவரின் போரட்டங்களும், சாதனைகளும் பலரின் வாழ்வில் பெரிய நம்பிக்கையையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.