16 ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டி இன்று துவங்கியது. குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர் கான்வே 1 ரன்னில் ஆட்டமிழக்க ருதுராஜ் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். அவருக்கு இணையாக ஆடிய மொயின் அலி 23 ரன்களிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து ராயுடுவும் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் மறுமுனையில் ருதுராஜ் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். தொடர்ந்து அசத்திய அவர் 50 பந்துகளில் 92 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள், 9 சிக்ஸர்களும் அடக்கம். பின் வந்த ஜடேஜா, துபே வந்ததும் வெளியேறினர். இறுதி ஓவரில் தோனி 3 மற்றும் 4 ஆம் பந்துகளில் சிக்ஸ் மற்றும் பவுண்டரிகளை விளாச சென்னை அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 178 ரன்களை அடித்தது. சிறப்பாக பந்துவீசிய குஜராத் அணியில் ஷமி, ரஷித் கான், அல்ஷாரி ஜோஷப் தலா 2 விக்கெட்களை வீழ்த்த ஜோஷ்வா லிட்டில் 1 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியில் விருதிமான் சஹா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. சஹா 25 ரன்களில் வெளியேற தொடர்ந்து வந்த சாய் சுதர்சன் 22 ரன்களை அடித்து சுப்மன் கில்லுக்கு ஒத்துழைத்தார். கேப்டன் ஹர்திக் 8 ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் 36 பந்துகளுக்கு 63 ரன்களை குவித்து வெளியேறினார். இறுதியில் விஜய் சங்கர் 27 ரன்களை குவித்து வெற்றிக்கு அருகில் அழைத்துச் செல்ல இறுதியில் வந்த ரஷித் கான் 19 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி என பறக்க விட்டார்.
இறுதி ஓவரில் முதல் இரு பந்துகளையும் சிக்ஸ் மற்றும் பவுண்டரி ஆக்கிய ராகுல் தெவாட்டியா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். குஜராத் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணியில் ஹங்கர்கேக்கர் 3 விக்கெட்களையும் ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.