இருபது ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய இருபது ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்த நிலையில், இந்திய அணி சூப்பர் 12 சுற்றோடு உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இதனைத்தொடர்ந்து இந்திய இருபது ஓவர் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சூழலில், பாகிஸ்தான் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உயர் செயல்திறன் மையத்தில் பணியாற்றுபவருமான முஷ்டாக் அகமது, விராட் கோலி விரைவில் சர்வதேச இருபது ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிடுவார் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "ஒரு வெற்றிகரமான கேப்டன், கேப்டன் பதவியிலிருந்து விலக விரும்புவதாகச் சொன்னால், டிரஸ்ஸிங் ரூமில் எல்லாம் சரியாக இல்லை என்று அர்த்தம். நான் இப்போது, இந்திய ட்ரெஸ்ஸிங் ரூமில் மும்பை மற்றும் டெல்லி என இரண்டு குழுக்களைப் பார்க்கிறேன். விராட் கோலி சர்வதேச இருபது ஓவர் போட்டியிலிருந்து ஓய்வுபெறுவார் என நினைக்கிறேன். இருப்பினும் அவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்" என கூறியுள்ளார்.
மேலும், இந்திய அணி ஐபிஎல் காரணமாகவே உலகக் கோப்பையில் தோல்வியடைந்ததாகவும் முஷ்டாக் அகமது தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், “ஐபிஎல் காரணமாக இந்தியா உலகக் கோப்பையில் தோல்வியடைந்தது என நினைக்கிறேன். உலகக் கோப்பைக்கு முன்னர் நீண்ட நாட்கள் பயோ-பபுளில் இருந்ததால், இந்திய வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர் என நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.