அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம், செரீனா வில்லியம்ஸ் 24-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வாரா என்ற எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையருக்கான இறுதிப்போட்டி, அமெரிக்காவின் ஆஸஸ் ஆர்தர் மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸூம், ஜப்பானின் நவோமி ஒசாக்காவும் விளையாட வுள்ளனர்.
குழந்தைப் பேறுக்குப் பிறகு பின்னடைவைச் சந்தித்திருக்கும் செரீனா வில்லியம்ஸ், இந்தப் போட்டியில் வென்று கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதேபோல், இந்தப் போட்டியில் வென்றால், 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீராங்கனை என்ற ஆஸ்திரேலிய லெஜண்ட் மார்கரேட் கோர்ட்டின் சாதனையை அவர் முறியடிப்பார்.
அதேசமயம், ஜப்பானியர் ஒருவர் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறாதிருந்த குறையை நவோமி ஒசாக்கா தீர்த்து வைத்துள்ளார். இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் கிராண்ட் ஸ்லாம் வென்ற முதல் ஜப்பானியர் என்ற சாதனையை அவர் படைப்பார்.
இதற்கு முன்னர் நவோமியும், செரீனாவும் ஒரேயொரு முறைதான் மோதியுள்ளனர். மயாமி ஓபன் போட்டியின் முதல் சுற்றில் இவர்கள் இருவரும் மோதினர். 6 - 3, 6 - 2 என்ற நேர் செட்களில் நவோமி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.