இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி, மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கங்குலியின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு ஒரு அடைப்பு சரிசெய்யப்பட்டது.
கங்குலி இதயத்தில் இருக்கும் மேலும் இரண்டு அடைப்புகளை சரி செய்ய ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அவசியம் என்றாலும் அவர் தற்போது சீராகவும், இதயத்தில் வலி இல்லாமல் இருப்பதாலும், சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்குப் பிறகோ ஆஞ்சியோபிளாஸ்டி செய்யலாம் என மருத்துவக் குழு முடிவுசெய்துள்ளதாக, அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் தலைமை அதிகாரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புகழ்பெற்ற இதய மருத்துவ நிபுணர் தேவி ஷெட்டி, கங்குலியை பரிசோதித்தார். அதன்பிறகு அவர், 'இந்த மாரடைப்பால் கங்குலிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர் இதயத்திற்கு எந்தச் சேதமும் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த நிகழ்வு அவரது வாழ்க்கை முறையையோ அல்லது ஆயுட்காலத்தையோ பாதிக்காது. அவர் மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கையை நடத்தப்போகிறார். கங்குலியின் இதயத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால், இந்த நிகழ்வால் எந்தவொரு பின்னடைவும் இல்லாமல், கங்குலி ஒரு மராத்தானில் பங்கேற்கலாம், ஒரு விமானத்தை இயக்கலாம் அல்லது அவர் விரும்பினால் கிரிக்கெட்டுக்கும் திரும்பலாம். அவர் வீட்டிற்குச் சென்றவுடன் வேலை செய்ய ஆரம்பிக்கலாம்'' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், கங்குலியின் இதயத்தில் உள்ள மற்ற அடைப்புகளுக்கு மருந்து மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி என இரண்டு வாய்ப்புகள் அவரிடம் இருக்கின்றன. ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு செல்வது நல்ல யோசனையாக இருக்கும். நாங்கள் இதனை அவரது முடிவிற்கே விட்டுவிட்டோம். இரண்டு வாரம் காத்திருந்து கூட அவர் முடிவெடுக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.