நேற்று நடந்த ஐ.பி.எல் ஆட்டத்தில் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பாஞ்சாப் அணி 20 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்து ஆடிய கொல்கத்தா அணி 18 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணி வீரர் கில் 65 ரன்கள் விளாசினார்.
இந்நிலையில் கொல்கத்தா அணி பந்துவீசிய போது அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் அந்த அணி வீரர்களிடம் கோவப்பட்டு பேசியது நேற்று சமூகவலைதளங்களில் வைரலானது. முதல் 'டைம் அவுட்' கொடுக்கப்பட்டபோது அணியின் சுனில் நரேன் மற்றும் உத்தப்பாவிடம் கடுமையாக பேசினார் கார்த்திக். இதன் பின் இருகிய முகத்துடன் வீரர்கள் அனைவரும் பீல்டிங் செய்ய சென்றனர்.
பின்னர் இதுகுறித்து பதிலளித்த கார்த்திக், "சுப்மான் கில்லை நாங்கள் தொடக்க வீரராக களமிறங்கியதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அவருக்கு கிடைத்த வாய்ப்பை இருகரம் கொண்டு பிடித்துள்ளார். மேலும் இன்று நான் வீரர்களிடம் கடுமையாகத்தான் பேசினேன். பந்துவீச்சாளர்களும், ஃபீல்டர்களும் நடந்து கொண்ட முறை சரியில்லை, எனக்கு பிடிக்கவும் இல்லை. எனவே அந்த நேரத்தில் வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவ்வாறு பேசினேன். நான் கோபப்பட்டு பேசுவதை அரிதாகவே பார்க்க முடியும். எங்கள் வீரர்களிடம் இருந்து நல்ல உள்ளீடும், முடிவும் கிடைக்க கோபம் அவசியம் என்றால், அதையும் செய்ய வேண்டியதுதான்" என கூறினார்.