
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 300 கேட்ச்களைப் பிடித்து தோனி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.
போட்டியின் 36.3-ஆவது ஓவரில் ஸ்டிரைக்கில் இருந்த ஜாஸ் பட்லருக்கு வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் பந்துவீசினார். அது பட்லரின் பேட்டில் எட்ஜாகி விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்சானது. இது மகேந்திர சிங் தோனி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பிடித்த 300-ஆவது கேட்ச் ஆகும். அதேபோல், ஒருநாள் போட்டிகளில் 300 கேட்சுகள் பிடித்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். உலகளவிலான இந்த சாதனைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் முதலிடத்தில் உள்ளார்.
40 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில், ஐந்து விக்கெட்டுகளை இழந்துள்ள இங்கிலாந்து அணி 230 ரன்களை எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் தோனி 33 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் இந்திய அளவில் 10ஆயிரம் ரன்களைக் கடந்த நான்காவது வீரர் மற்றும் உலகளவில் 12ஆவது வீரர் என்ற சாதனையைப் படைப்பார். சென்ற போட்டியிலேயே இந்த சாதனையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.