நேற்று புனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கும் இடையேயான போட்டி நடைபெற்றது. காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறக்கூடாது என்று சென்ற போட்டியின்போது போராட்டம் நடைபெற்றது. அதனால் அடுத்த போட்டி புனேவிற்கு மாற்றப்பட்டது. இந்தப் போட்டியைக்காண சென்னையிலிருந்து சிறப்பு இரயில் மூலம் ஆயிரம் ரசிகர்கள் சென்றிருந்தனர்.
நேற்றைய ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா அவுட் ஆன பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி களத்தில் இறங்கினார். ரசிகர்கள் அனைவரும் எப்பொழுதும்போல "தோனி தோனி" என்று கூச்சலிட, திடீரென ஒரு ரசிகர் மைதானத்திற்குள் நுழைந்து தோனியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று ஒரு சில நொடிகள் அவரிடம் ஏதோ பேசிவிட்டு மைதானத்தை விட்டு தனது இருக்கைக்கு சென்றார். அவர் செல்லும்பொழுது இறைவனுக்கு நன்றி சொல்வதுபோல் வானத்தை நோக்கி செய்கை செய்தார். ஆனால் இதற்கு முன்பெல்லாம் ரசிகர் யாரவது இவ்வாறு வந்தால் காவலர்கள் அவர்களை வெளியேற்றுவார்கள் ஆனால் நேற்று அவர் மைதானத்திற்குள் வந்தபோதும், வெளியே சென்றபோதும் எந்த ஒரு காவலரும் அவரைத்தடுக்கவில்லை.