ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் மோதவுள்ளன. தரவரிசை பட்டியலில் 18 புள்ளிகள் பெற்று 3 வது இடத்தில் உள்ள டெல்லி அணி 12 புள்ளிகள் மட்டுமே பெற்று நான்காவது இடத்தில் உள்ள ஹைதராபாத் அணியுடன் வாழ்வா சாவா போட்டியில் விளையாடவுள்ளது.
இந்த ஆண்டு இளம் கேப்டன், பெரும்பாலான இளம் வீரர்களுடன் களமிறங்கிய டெல்லி அணி 6 ஆண்டுகளுக்கு பிறகு ஃப்ளேஆப் சுற்றுக்கு சென்றுள்ளது. தற்போது விளையாடும் அணிகளில் இதுவரை இறுதிப்போட்டியை சந்திக்காத ஒரே அணி டெல்லி அணி மட்டுமே. டெல்லி அணி நாக் அவுட் போட்டிகளில் ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை என்ற நிலையை மாற்ற தயாராகி வருகிறது டெல்லி.
டெல்லி அணிக்கு லீக் போட்டிகளில் சிறப்பாக பவுலிங் செய்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ரபாடா இல்லாமல் விளையாடுவது சற்று பலவீனமாக அமையும். 12 போட்டிகளில் 25 விக்கெட் எடுத்து இந்த சீசனில் அதிக விக்கெட் எடுத்த பவுலர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
அதே போல ஹைதராபாத் அணியில் அதிரடி ஒப்பனிங் பேட்ஸ்மேன்களான வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர் இல்லாமல் இருப்பது அந்த அணிக்கு பலவீனமாக இருக்கும். மார்டின் குப்தில், வில்லியம்சன் ஆகியோர் அதிக பொறுப்புடன் விளையாடிய வேண்டிய நிலையில் ஹைதராபாத் அணி உள்ளது. மனிஷ் பாண்டே கடந்த சில போட்டிகளில் 1-வது விக்கெட்டிற்கு களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகிறார். பவுலிங்கில் புவனேஷ், ரசித் ஆகியோர் கலக்கி வருகின்றனர்.
ஷிகர் தவானை டிரேடிங் விண்டோ மூலம் 3 வீரர்களை கொடுத்து எடுத்தது டெல்லி அணி. அதற்கு தக்க பலன் கிடைத்துள்ளது. இந்த தொடரில் 486 ரன்கள் எடுத்து டெல்லி அணிக்கு சிறப்பான ஒப்பனிங் தந்துள்ளார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப விளையாடி அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். இந்த தொடரில் 442 ரன்கள் எடுத்துள்ளார். அதிரடி இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்த போட்டியில் தனது அதிரடியை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 14 போட்டிகளில் 401 ரன்கள் எடுத்துள்ளார். டெல்லி அணிக்கு பலமாக இருப்பது டாப் நான்கு பேட்ஸ்மேன்கள் தான்.
பவுலிங்கில் அமித் மிஸ்ரா எகானமி ரேட் 6.33. மற்ற டெல்லி ஸ்பின்னர்களின் எகானமி ரேட் 9-க்கும் அதிகமாக உள்ளது. அக்சர் படேல் (9.35), டிவத்தியா (9.00), லேமிச்சேன் (9.13). டெல்லி அணி ஸ்பின் பவுலிங்கில் பலவீனமாக இருப்பதை காட்டுகிறது.
இந்த ஆண்டு டெல்லி அணியின் பெயர், ஜெர்சி, பயிற்சியாளர்கள் என அனைத்தும் மாற்றப்பட்டு புது அணியாக களமிறங்கி 2012-ஆம் ஆண்டிற்கு பிறகு ஃப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு பயிற்சியாளர்கள் துறையில் உள்ள கங்குலி மற்றும் பாண்டிங் ஆகியோரின் அனுபவம் இளம் வீரர்களுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, அக்சர் படேல் என டெல்லி அணியின் முக்கிய இளம்வீரர்கள் டிராவிட்டிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இரு அணிகளும் இதுவரை விளையாடிய 14 போட்டிகளில் 9 முறை ஹைதராபாத் அணியும், 5 முறை டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளது. விசாகப்பட்டினத்தில் இரு அணிகளும் ஒரே ஒரு போட்டியில் மோதிய நிலையில் அதில் டெல்லி அணி வென்றுள்ளது.
முதல் பேட்டிங் செய்த அணி 22 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 34 முறையும் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 156, இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 148. பிட்சின் தன்மையில் மாற்றம் இல்லாமல் இருந்தால் இந்த மைதானத்தில் அதிக அளவில் ஸ்கோர் குவிக்க இயலாது. ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக ரன்கள் எடுத்தது 223/3 (சென்னை vs ஹைதராபாத்), குறைந்தபட்ச ரன்கள் 80/10 (டெல்லி vs ஹைதராபாத்), அதிகபட்ச ரன்களை சேஸிங் செய்தது 217/7 (ராஜஸ்தான் vs டெக்கான் சார்ஜர்ஸ்), குறைந்தபட்ச ரன்களை டிஃபண்ட் செய்தது 129/8 (மும்பை vs புனே).
டெல்லி கேபிடல்ஸ்:
பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), காலின் இன்கிராம், அக்சர் படேல், கிறிஸ் மோரிஸ், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் /கீமோ பால், ட்ரென்ட் போல்ட்/லேமிச்சேன், அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
மார்டின் குப்தில், சஹா (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), விஜய் சங்கர், யூசுப் பதான்/அபிஷேக் சர்மா, முகம்மது நபி, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சந்தீப் சர்மா/ பசில் தம்பே.