மேற்கிந்திய தீவுகள் அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக செயல்பட்டு வந்தவர் டுவேயின் ப்ராவோ. இவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தன்னுடைய திறமையை நன்கு வெளிப்படுத்தியவர். அதேபோல, இவரின் கிரிக்கெட் ஆட்டத்திற்கு எவ்வளவு ரசிகர் கூட்டம் இருக்கிறதோ, அதேபோல மைதானத்தில் விக்கெட் எடுத்துவிட்டு இவர் போடும் அட்டத்திற்கும் அதிக அளவிலான ரசிகர்கள் உண்டு. இந்தியாவில் நடக்கும் ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கு என்று தமிழக ரசிகர்கள் பலரும் உள்ளனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்காக முதன் முதலாக விளையாடினார். இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 2968 ரன்களையும், 199 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். டி20யில் 1142 ரன்களையும், 52 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ”சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம் என்று தீர்மானித்துள்ளேன். 14 வருடம் கழித்தும் நான் முதன் முறையாக மெரூன் கேப்பை இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் அணிந்தது என் நினைவில் இருக்கிறது. அன்று கிடைத்த உத்வேகம் மற்றும் உற்சாகம், என் வாழ்நாள் முழுவதும் இருந்துள்ளது” என்று கூறியுள்ளார்.