Skip to main content

நம்முடைய 12 வருட பலமே அதுதான்! அது சொதப்பலாக அமைந்துவிட்டது - சி.எஸ்.கே பயிற்சியாளர் பேச்சு!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

csk coach

 

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில், டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத்தொடரில், இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரு வெற்றியும், இரு தோல்விகளும் கண்டுள்ளது. சென்னை அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு நிலையாக இல்லாததே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

 

ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் அணியில் இல்லாதது, காயத்தின் காரணமாக கடந்த இரு போட்டிகளில் ராயுடு விளையாடாதது சென்னை அணியைத் தடுமாறச் செய்துள்ளது. தொடர்ச்சியான இரு தோல்விகள் குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங் விளக்கம் அளித்துள்ளார்.

 

அதில் அவர், "12 வருடமாக சுழற்பந்துவீச்சு சென்னை அணிக்கு பெரிய பலமாக இருந்தது. தற்போது, அது சொதப்பலாக அமைந்துள்ளது. இனி வரும் போட்டிகளில் அதில் கூடுதல் கவனம் செலுத்த இருக்கிறோம். மூன்று போட்டிகளையுமே, மூன்று விதமான மைதானங்களில் விளையாடி உள்ளோம். சூழலுக்கு ஏற்ப பொருந்துவதில் வீரர்கள் தடுமாறுகிறார்கள். கடந்த போட்டிகளில் பந்துவீச்சு மோசமாக அமைந்துவிட்டது. அடுத்த போட்டிக்கு இன்னும் ஆறு நாட்கள் உள்ளது. செய்த தவறுகளைத் திருத்த, இது சரியான காலமாக இருக்கும்" எனக் கூறினார்.