நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றுள்ள இந்திய அணி, அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கான தொடரை டிசம்பர் 17ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் ஒமிக்ரான் வகை கரோனா பரவிவருவதால், இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “இந்தியா, தென்னாப்ரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடும்” எனவும், அதேநேரத்தில் இரு அணிகளுக்குமிடையே நடைபெற இருந்த இருபது ஓவர் போட்டிகள் மட்டும் வேறு தேதியில் நடைபெறும் எனவும் ஜெய் ஷா அறிவித்தார்.
இந்நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 17ஆம் தேதி தொடங்க இருந்த இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர், தற்போது டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள புதிய அட்டவணைப்படி, இரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதேபோல் இரண்டாவது டெஸ்ட் ஜனவரி 3 ஆம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் ஜனவரி 11ஆம் தேதியும் தொடங்கவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இந்தியா - தென்னாப்பிரிக்கா, ஒருநாள் தொடர் ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.