2018-ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான பிஃபா விருதினை, குரோஷியா நாட்டின் கேப்டன் லூக்கா மேட்ரிக் பெற்றுள்ளார். இவர் போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோ மற்றும் எகிப்தின் முகமது சாலாவை பின்னுக்குத் தள்ளி இந்த விருதைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
லூக்கா மேட்ரிக் குரோஷியா அணியின் கேப்டனாக, சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின்போது தேர்வு செய்யப்பட்டார். மேலும், வரலாற்றில் முதன்முறையாக மிகச்சிறிய அணியான குரோஷியா, இவர் தலைமையில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. தொடரின் முடிவில் லூக்காவுக்கு தங்க கால்பந்து விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், அவர் பிஃபா சிறந்த கால்பந்தாட்ட வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் யூ.இ.எஃப்.ஏ. லூக்காவுக்கு சிறந்த வீரர் விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விருதுக்கான போட்டியில் உலகின் தலைசிறந்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் முகமது சாலா ஆகியோர் இருந்தனர். லூக்காவும், ரொனால்டோவும் ரியல் மேட்ரிட் அணிக்காக ஒன்றாக விளையாடியுள்ளனர்.
அதேபோல், பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் திதியெர் தேஸ்காம்ஸுக்கு சிறந்த பயிற்சியாளர் விருதும், பெல்ஜியம் கோல்கீப்பர் திபாவுட் கோர்டாஸுக்கு சிறந்த கோல்கீப்பர் விருதும் வழங்கவுள்ளதாக பிஃபா அறிவித்துள்ளது.