ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் தங்கள் இடைக்கால அரசை அமைத்துள்ளனர். ஆப்கான் நாட்டைக் கைப்பற்றிய பிறகு ஷரியா சட்டப்படி பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என தலிபான்கள் அறிவித்திருந்தாலும், அந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
பெண்களும் தங்களுக்கான உரிமைகளைக் கோரி தலிபான்களுக்கு எதிராக போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தச் சூழலில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் விளையாட்டில் கலந்துகொள்வது கேள்விக்குறியாகியுள்ளது. அண்மையில் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த தலிபானின் கலாச்சார ஆணையத்தின் துணைத் தலைவர் அகமதுல்லா வசிக், ‘பெண்கள், கிரிக்கெட் உட்பட எந்த விளையாட்டிலும் கலந்துகொள்ள அனுமதியளிக்கப்படாது’ என தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர், "பெண்கள் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என நான் நினைக்கவில்லை. ஏனென்றால், பெண்கள் கிரிக்கெட் விளையாடுவது அவசியமானது அல்ல. கிரிக்கெட் விளையாடும்போது, தங்களின் உடலையும் முகத்தையும் மறைக்க முடியாத சூழ்நிலையை அவர்கள் சந்திக்க நேரிடும். இஸ்லாம் அதை அனுமதிக்கவில்லை" என தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், பெண்களைக் கிரிக்கெட் விளையாட அனுமதிக்காவிட்டால் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் ஆடவர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி இரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கிரிக்கெட் அனைவருக்குமானது என்பதே தங்கள் பார்வை என தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், பெண்கள் இந்த விளையாட்டில் பங்கேற்க அனைத்து மட்டங்களிலும் ஆதரவளிக்கிறோம்" எனவும் கூறியுள்ளது.