Skip to main content

ட்வீட்டால் சர்ச்சை; மொயின் அலிக்கு சகவீரர்கள் ஆதரவு - தந்தை அதிர்ச்சி!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

MOEEN ALI

 

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். அவர் தனது ஜெர்சியிலிருந்து, மதுபான நிறுவனத்தின் லோகோவை நீக்குமாறு சென்னை அணி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்ததாகவும், அதனை சென்னை அணி நிர்வாகம் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை சென்னை அணி நிர்வாகம் மறுத்தது. மொயின் அலி, மதுபான நிறுவனத்தின் லோகோவை நீக்குமாறு தங்களிடம் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை என தெரிவித்தது.

 

இதற்கிடையே வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின், “மொயின் அலி கிரிக்கெட்டில் சிக்காமலிருந்திருந்தால், அவர் ஐஸ்.ஐஸ் இயக்கத்தில் சேர்வதற்காக சிரியாவிற்கு சென்றிருப்பார்” என ட்வீட் செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களில் அவருக்கு கண்டனங்கள் குவிந்தன. இங்கிலாந்து வீரர்கள் சாம் பில்லிங்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் மொயின் அலி குறித்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

 

இதற்குப் பதிலளித்த தஸ்லிமா நஸ்ரின், “மொயின் அலி குறித்த தனது பதிவு மறைமுகமான கிண்டல் (SARCASAM) எனவும், இஸ்லாமிய சமூகத்தை மதச்சார்பற்றவர்களாக்க தான் முயல்வதாலும், இஸ்லாமிய வெறியை எதிர்ப்பதாலும் இதனை அவர்கள் ஒரு பிரச்சினையாக மாற்றி, என்னை அவமானப்படுத்த முயல்கிறார்கள்” என்றும் தெரிவித்தார். 

 

இந்தநிலையில் தஸ்லிமா நஸ்ரின் கருத்தால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக தெரிவித்துள்ளார் மொயின் அலியின் தந்தை. இதுகுறித்து அவர், "எனது மகன் மொயினுக்கு எதிரான தஸ்லிமா நஸ்ரினின் மோசமான கருத்தைப் படித்ததில் எனக்கு வேதனையும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. அவரது விளக்கமளிக்கும் ட்வீட்டில், தனது கருத்தைக் கிண்டல் என்று விவரித்துள்ள அவர், அடிப்படைவாதத்திற்கு எதிராக நிற்கிறேன் என்றும் கூறுகிறார்.

 

அவர் ஒரு கண்ணாடியைப் பார்த்தால், அவர் ட்வீட் என்ன ட்வீட் செய்வாரோ அது அடிப்படைவாதம், ஒரு முஸ்லிம் நபருக்கு எதிரான மோசமான எண்ணம், ஒரு தெளிவான இஸ்லாமிய வெறுப்பு பேச்சு என அறிந்துகொள்வார். சுயமரியாதை அற்ற, மற்றவர்களுக்கு மரியாதை தராத ஒருவர், இவ்வளவு கீழே வளைந்துதான் போவார். உண்மையைச் சொன்னால், நான் மிகவும் கோபமாக இருக்கிறேன், ஆனால் என் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், அவரைப் போன்றவர்கள் எதிர்பார்க்கும் செயலில் ஈடுபடுவேன் என்று எனக்குத் தெரியும். அவரை நான் ஒருநாள் சந்திக்க நேர்ந்தால், உண்மையில் என்ன நினைக்கிறேன் என்று கூறுவேன். தற்போது ஒரு அகராதியை எடுத்து சர்க்காசம் (SARCASM) என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று பார்க்கச் சொல்வேன்" என தெரிவித்துள்ளார்.