ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 137 ரன்கள் அடித்தது.
138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அதில், டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டெல்லி அணி தனது 3வது வெற்றியை பதிவு செய்தது.
இந்தப் போட்டியில் மும்பை அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.
முன்னதாக சிஎஸ்கே கேப்டன் தோனிக்கும் இதே காரணத்துக்காக அபராதம் விதிக்கப்பட்டது. எதிர்காலத்தில், இந்த தொடரில் இதே அணிகள் மீண்டும் மெதுவாக பந்துவீசினால் இவ்வணிகளின் கேப்டன்களுக்கு ரூ.24 லட்சம் அபராதம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித்துக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த அபராதத் தொகை ஆட்ட சம்பளத் தொகையில் இருந்து கழிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் கூறியிருக்கிறது.
நேற்றைய போட்டியில் மும்பை அணி பந்து வீசியபோது, ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக அவ்வணியின் பொல்லார்ட் கேப்டன்ஸி செய்தார். ஆனால், ஐபிஎல் நிர்வாகம் ரோஹித்துக்கு அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் ரசிகர்களிடையேயும், சமூக வலைதளத்திலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.