Skip to main content

சென்னை - பஞ்சாப்; என்ன எதிர்பார்க்கலாம்? யாருக்கு வெற்றி? முழு அலசல்

Published on 30/04/2023 | Edited on 30/04/2023

 

Chennai - Punjab; What to expect? Who wins? Full analysis

 

நடப்பு ஐபிஎல் சீசனின் 41 ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

 

இரு அணிகளும் தங்களது கடைசி ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ள நிலையில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. பஞ்சாப் அணி வலுவான அணியாக அறியப்பட்டாலும் 8 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி, 4 போட்டிகளில் தோல்வி என புள்ளிப்பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது. மறுபுறம் சென்னை அணியில் அனுபவம் வாய்ந்த வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாத போதும் பந்துவீச்சாளர்கள் கொடுக்கும் இலக்கினை பேட்ஸ்மேன்கள் துரத்துவதும், முதலில் பேட்டிங் என்றால் வலுவான இலக்கை நிர்ணயிப்பதும் என ஒவ்வொரு ஆட்டத்தையும் போராடி வெல்கின்றனர். சென்னை அணி 8 போட்டிகளில் 3 தோல்வி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4 ஆவது இடத்தில் உள்ளது. 

 

பஞ்சாப் அணி லக்னோ அணியுடன் நேற்று முன்தினம் விளையாடிய நிலையில், போதிய பயிற்சி இன்றியே இன்று சென்னையை எதிர்கொள்கிறது. சென்னை அணி 27 ஏப்ரலில் ராஜஸ்தானுடன் விளையாடிய நிலையில் இன்று தனது சொந்த மைதானத்தில் பஞ்சாபை எதிர்கொள்கிறது.

 

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி ஹைதராபாத்துடன் விளையாடிய போட்டியில் சுழற்பந்துவீச்சே ஆட்டத்தை தீர்மானித்ததால் இன்றும் ஆட்டத்தின் முடிவில் சுழல் முக்கியப் பங்காற்றும். அந்த வகையில் சென்னை அணி மஹீஸ் தீக்‌ஷனா, மொயின் அலி, ஜடேஜா உடன் களமிறங்கும். மறுபுறம் பஞ்சாப் அணி லக்னோ அணியுடனான போட்டியில் கூடுதல் வேகப்பந்துவீச்சாளருடன் களமிறங்கியதே தோல்விக்கான முக்கியக் காரணம் என கேப்டன் ஷிகர் தவான் கூறியிருந்தார். அந்த போட்டியில் லக்னோ அணி 257 ரன்களை குவித்தது. இன்றைய போட்டியில் ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் ப்ரார், சிக்கந்தர் ரசா போன்ற வீரர்களுடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. ராகுல் சாஹர் சென்னை மைதானத்தில் 7 போட்டிகளில் விளையாடி அதில் 11 விக்கெட்களை வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

வலுவான வேகப்பந்துவீச்சு கொண்ட பஞ்சாப் அணி சுழலுக்கு சாதகமான சென்னை மைதனத்தில் சுழலில் பலமுடன் இருக்கும் சென்னை அணியை எதிர்கொள்கிறது. பஞ்சாப் அணியின் பேட்டிங் ஆர்டரில் அனுபவம் வாய்ந்த ஷிகர் தவானுடன் இளம் வீரர்களான ப்ரப்சிம்ரன் சிங், அதர்வா டைட், ஜிதேஷ் சர்மா போன்றோர் நன்றாக ஆடி வருகின்றனர். அதே சமயத்தில் ஆல்ரவுண்டர்களான சாம் கர்ரன், லிவிங்ஸ்டன் போன்றோரும் தேவைப்படும் போது அதிரடியாக ஆடி ரன்களை குவிக்கின்றனர். சென்னை அணிக்கு எதிராக பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் 1029 ரன்களை குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

சென்னை அணியிலும் பெரிதாக செயல்படாத அம்பத்தி ராயுடுவை தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். பந்துவீச்சிலும் பீல்டிங்கிலும் அசத்தும் ஜடேஜா இதுவரை பேட்டிங்கில் பெரிதாக சோபிக்காதது குறிப்பிடத்தக்கது. சென்னை அணிக்கு இன்று சுழல் கைகொடுக்கும் பட்சத்தில் சென்னைக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

 

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. போட்டி மாலை நடைபெறுவதால் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம்.