இந்திய கிரிக்கெட் அணியில் மிக முக்கியமான ஆல்ரவுண்டராக செயல்பட்டவர் யுவராஜ் சிங். தன் ஆக்ரோஷமான ஆட்டத்தால் சிக்ஸர்களைப் பறக்கவிடும் இவர், இந்தத் தலைமுறையின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் ஒருவர் என்று புகழப்பட்டவர். தனக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருந்தாலும், இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பைக்குப் பிறகு அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார் யுவராஜ் சிங்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய யுவராஜ் சிங், இந்திய அணியின் முன்னாள், இன்னாள் கேப்டன்களைப் பற்றிய தன் பார்வையை விளக்கியுள்ளார். ‘தோனியோடு ஒப்பிடும்போது கோலி முற்றிலும் மாறுபட்டவர். தோனி அமைதியானவர். ஆனால், கோலி மிகவும் ஆக்ரோஷமானவர். தோனி கேப்டனாக பொறுப்பேற்றபோது, அப்போதைய அணியில் அனுபவம் வாய்ந்த பல வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால், கோலி தலைமையிலான அணி பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இதெல்லாவற்றிற்கும் கோலியின் தலைமைப்பண்பே காரணம்’ எனக் கூறினார்.
மேலும், கிரிக்கெட்டில் உடல்தகுதியின் தேவை குறித்து பேசிய அவர், ‘விளையாட்டு என்று வருகையில் ஒரு வீரருக்கு உடல்தகுதி என்பது மிகவும் இன்றியமையாதது. அந்த வகையில் விராட் கோலி உடற்தகுதி விஷயங்களில் முக்கியத்துவம் கொடுக்கிறார். முந்தைய தலைமுறை வீரர்களோடு ஒப்பிடுகையில், இன்றைய தலைமுறை வீரர்கள் உடல்தகுதியில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு விராட் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்’ என தெரிவித்துள்ளார்.