பரபரவென்றிருக்கிறது நாங்குநேரித் தொகுதி. 2,51886 வாக்காளர்களைக் கொண்ட நாங்குநேரி தொகுதியின் வாக்காளர் வரிசையிலிருப்பவர்கள் இந்து நாடார், தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் தேவர் பிரிவினர் யாதவர்கள், கிறிஸ்தவ நாடார், முஸ்லிம் மதத்தினர் என்று போகிறது.
ஏரியாவின் சமூக மக்களுக்கு ஏற்ப அதிமுகவும், காங்கிரசும் அதன் கூட்டணியான திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி, வி்சிக என கட்சியின் அந்தப் பிரதிநிதிகளின் தலைமையில் களப் பணியிலிருக்கிறார்கள். தொகுதி முன்னேற்றமின்மை, வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பின்றிருக்கும் நாங்குநேரியின் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது. ஆளும் அ.தி.மு.க. அதனை எதிர்கொள்ள பல வியூகங்களை எடுத்து வருகிறது. அய்யா வழி பக்தர்களான இந்து நாடார் வாக்குகள் சாதகமாக இருக்கும் என்று நம்புகிறது இலைத்தரப்பு. ஆனால் அய்யாவழி பக்தர்கள் அனைத்தும் சமூகத்திலும் இருக்கிறார்கள். பல்வேறு மனநிலைப்பாட்டைக் கொண்டவர்கள். மேலும், மைனாரிட்டி சமூகத்தவர்களின் வாக்குகளை வளைக்க இலைத்தரப்பு அதனை வெளிப்படுத்தும் வகையில் பா.ஜ.க. வைப் புறக்கணிப்பதால், கோபத்திலிருக்கிறார் அண்டை மாவட்டத்தின் பா.ஜ.க.வின் எக்ஸ் அமைச்சர் பொன்னார் என்கிறார்கள். நாடார் சமூகத்தின் இளைஞர்களின் வாக்குகள் காங்கரசின் பக்கம் சாய்வதைத் தடுக்க, இலை ஆதரவில் களமிறக்கப்பட்டவர் பனங்காட்டுப் படையின் வேட்பாளர் ஹரி நாடார் ஆனால் அதில் ஏற்பட்ட பின்னடைவும் இலைக்கு வசமில்லையாம். காரணம் அந்த சமூகத்தின் முக்கியப் புள்ளியான சுபாஷ் பண்ணையாரை , காங்கிரஸ், தன் ஆதரவுப் பக்கம் கொண்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. தொகுதியின் நூறுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருக்கும் பருத்திக் கோட்டை நாட்டார் அமைப்பு பட்டியலின மக்களை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று ஆளுந் தரப்பின் மீதான அதிருப்தியில் கருப்பு கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பை அறிவித்திருக்கிறார்கள்.
இதே போன்ற இலைத் தரப்பின் பலவீனங்களை, தங்களுக்கான பலமாகத் திருப்பியிருக்கிறது காங்கிரஸ் கூட்டணியான தி்.மு.க.வும் துணை நிற்கும் கட்சிகளும் பக்கா பிளானுடன் ஸ்கெட்ச் போட்டு கூட்டணிக் கட்சியினரை உள்ளடக்கிய பல கமிட்டிகளை அமைத்து களப் பணியிலிருக்கிறார்கள். களப்பணிக்குச் செலவுகளுக்கு பணமில்லை என்ற பேச்சுக்கு வழி வைக்கவில்லை கைத் தரப்பு வேட்பாளர். எதிரணியின் அதிருப்தியாளர்களான கிப்ட்காரரின் தரப்புகளையும் அரவணைத்துக் கொண்ட காங்கிரசிற்கு மதசார்பற்ற மைனாரிட்டிப் பிரிவினர், இஸ்லாமியர் சமூகம், வி.சி.கட்சித் தரப்பினர் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வாக்குகள கை கொடுக்கின்றன. ஆனாலும் கரன்சியே பிரதான ஆயுதமாகத் தென்படுவதால், ஊசிக்கு ஊசி பாயுமா என்கிற நிலையில், கைத்தரப்பும், இலைத்தரப்பும் வாக்காளர் பட்டுவாடாவையும் நடத்தி முடித்துவிட்டது. நாற்காலி யாருக்கு என்ற பரபரப்பு இருதரப்பிலும் பற்றியிருக்கும் நேரத்தில் வைட்டமின் ”ப” போக்கை மாற்றலாம் என்பதே நிலை என்கிறார்கள்.