கோவையில் பல்வேறு கிளைகளை கொண்ட தனியார் சிட் பண்ட் நிறுவனம் பணத்தை பெற்றுக் கொண்டு திருப்பி செலுத்தாமல் ஒன்றரை கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக கூறி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநகர காவல் துறை ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.
கோவையில் உள்ள தனியார் சிட் பண்ட் நிறுவனம், டவுன்ஹால், பூ மார்க்கெட், சரவணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் சிட் சேர்ந்து வந்து உள்ளனர். இந்நிலையில் கடந்த மே மாதம் இந்த நிறுவனத்தை பூட்டி விட்டு சென்று உள்ளனர். நிறுவனத்தின் உரிமையாளர் முரளிதரன், பொதுமக்களின் பணத்தை விரைவில் அளிப்பதாக கூறி உள்ளார்.
ஆனால் மூன்று மாதங்களாகியும் பணத்தை திருப்பி கொடுக்காமல், ஏமாற்றுவதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோவை மாநகர காவல் துறை ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர். ஒன்றரை கோடி ரூபாய் அளவிற்கு, ஏமாற்றி உள்ளதாகவும், இதனால் உடனடியாக சிட் நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்து தங்களது பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என்ற மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.