இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி மீது கொடுக்கப்பட்ட 'இரட்டைப் பதவி ஆதாயம்' தொடர்பான புகார் விசாரிக்கபடும் என பி.சி.சி.ஐ. நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, 'கார்னர்ஸ்டோன் வென்ச்சர்ஸ்' நிறுவனம் மற்றும் 'விராட் கோலி ஸ்போர்ட்ஸ்' நிறுவனங்களின் இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இதில் 'கார்னர்ஸ்டோன் வென்ச்சர்ஸ்' நிறுவனம் கோலியின் வணிக ஒப்பந்தங்கள் மற்றும் ரிஷப் பந்த், ஜடேஜா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோரது வணிக ஒப்பந்தங்களையும் கையாண்டு வருகிறது.
இந்நிலையில் அணியின் கேப்டன், இயக்குனராக இருக்கும் ஒரு நிறுவனம் மற்ற வீரர்களின் வணிக ஒப்பந்தங்களைக் கையாள்வது, அணி தேர்வு மற்றும் நிர்வாகத்தில் குளறுபடிகளுக்கு வழிவகுக்கும் எனவும், பி.சி.சி.ஐ. விதி 38(4) - இன்படி ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளை வகிக்கக்கூடாது என்ற விதியையும் கோலி மீறியுள்ளார் என்றும் மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்க ஆயுள் உறுப்பினர் சஞ்சய் குப்தா பி.சி.சி.ஐ. நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இந்நிலையில் இதுகுறித்து பி.சி.சி.ஐ. நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் தெரிவிக்கையில், விரைவில் இதுகுறித்து விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.