தொடர்ந்து விடாமுயற்சியில் ஈடுபட்டால் எந்தத் தடையையும் உடைத்து, சாதனை படைக்கலாம் என்பதை சாதாரண பியூனின் மகன் நிரூபித்திருக்கிறார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாஃபர்நகரைச் சேர்ந்தவர் நிஷு குமார். சிறந்த கால்பந்தாட்டத் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அவரது பகுதி மற்றும் தெரிந்தவர்களால் ரொனோல்டோ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். அதிலும், உலக கால்பந்து நட்சத்திரமான ரொனோல்டோவைப் போலவே அதிரடியாக விளையாடும் திறமையும் கொண்டவர்.
கால்பந்தாட்டத்தின் மீதான தீராத காதலால், உள்ளூர் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு கோப்பைகளை வென்றுள்ளார் நிஷு குமார். மாவட்டவாரியான போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியதன் விளைவாக, நிஷு குமார் ஐ.எஸ்.எல். தொடரில் பெங்களூரு அணிக்காக தேர்வாகி விளையாடி வந்தார். அதிலும் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக தற்போது நிஷு குமார் இந்திய கால்பந்தாட்ட அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
“ஐந்து வயதில் இருந்தே கால்பந்தாட்டத்தின் மீது இருந்த ஈர்ப்பின் காரணமாக, விளையாடத் தொடங்கினேன். பள்ளி விளையாட்டுத்துறை ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி முறையாக பயிற்சி மேற்கொண்டேன். என்னைப் போன்றவர்களுக்கு பொருளாதார அளவில் மிக எளிமையானது கால்பந்துதான். ஒரேயொரு பந்து இருந்தால் மட்டுமே அதை விளையாட போதுமானது” என தெரிவித்துள்ள நிஷு குமார், பல்வேறு தடைகளைக் கடந்து 21 வயதில் இந்திய அணிக்காக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.