யாராலும் முறியடிக்கப்படாமல் இருந்த விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையை, பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஸமான் முறியடித்து சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தானின் தொடக்க வீரரான ஃபகர் ஸமான், தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறார். ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி 5 - 0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இந்தத் தொடரின் மூலம் 200 ரன்கள் விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அவர் அடைந்தார். அதேபோல், தொடர்ந்து விக்கெட்டை இழக்காமல் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடி 455 ரன்கள் குவித்தும் சாதனை படைத்தார்.
இந்நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 20 ரன்கள் எடுத்திருந்த ஃபகர் ஸமான் ஆயிரம் ரன்களைக் கடந்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் வெறும் 18 போட்டிகளில் ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் 21 போட்டிகளில் ஆயிரம் ரன்கள் அடித்ததுதான் உலக சாதனையாக இருந்தது. கெவின் பீட்டர்சன், ஜோனத்தான் ட்ராட், குவிண்டன் டீகாக், பாபர் ஆசம் ஆகியோர் விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை சமன் செய்திருந்தனர். எனவே, இவர்கள் அனைவரின் சாதனையையும் முறியடித்து, அசத்திக் கொண்டிருக்கிறார் ஃபகர் ஸமான்.