கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அந்நாட்டு அரசுக்கு தங்களது பாதி சம்பளத்தைக் கொடுப்பதாக அறிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை சர்வதேச அளவில் 22 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ள சூழலில், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 14 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் இதுவரை 39 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் தங்களது சம்பளத்தில் பாதியை அரசுக்கு நிதியாக அளித்துள்ளனர்.
17 ஒப்பந்த வீரர்கள் மற்றும் சர்வதேச போட்டிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள 10 வீரர்கள் என மொத்தம் 27 வீரர்கள் தங்களது பாதி சம்பளத்தை அரசுக்கு வழங்கியுள்ளனர். இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகமே கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறது. வங்கதேசத்திலும் கரோனா வைரஸ் பாதிப்பு வந்துள்ளது. இதனை மக்கள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். நாங்கள் கொடுத்துள்ள இந்த நிதி அரசுக்கு போதுமானதாக இருக்காது. இருந்தாலும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம்மால் முடிந்த நிதியைக் கொடுக்கும் போது அது பெரிய தொகையாக மாறும்" எனத் தெரிவித்துள்ளனர்.
வங்கதேச வீரர்களைப் போலவே கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் அரசுக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.