இந்தோனிஷியாவில் நடைபெற்று வரும் 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 800 மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த மஞ்சித் சிங் தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் மஞ்சித் சிங். அவரது தந்தை ரந்திர் சிங் மாநில அளவிலான குண்டு எறிதல் போட்டிகளில் விளையாடியுள்ளார். தனது விவசாய நிலத்தில் ஓடிப்பழகிய மஞ்சித் சிங், ஓட்டப் பந்தயத்திற்காகவே தன் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்துள்ளார். வருடத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்தால், அப்போது விவசாய வேலைகளைப் பார்த்துக் கொள்வாராம். தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சியில் இருந்ததால், மஞ்சித் சிங் தனது 4 மாத குழந்தையைக்கூட பார்க்க முடியவில்லை என்று வருத்தப்படுகிறார்.
தங்கம் வென்றுள்ள மகிழ்வான தருணம் பற்றி மஞ்சித் சிங்கிடம் கேட்டபோது, “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் எனது ஓ.என்.ஜி.சி. ஒப்பந்தத்தை புதுப்பிக்க முடியாது என்று சொன்னார்கள். நான் எதற்காக என்று கேட்டபோது, என் ஓட்டத்தில் திருப்தியில்லை என்றார்கள். எனக்கு வயதாகிவிட்டதால் இனி என்னால் எதையும் நிரூபிக்க முடியாது எனக் கூறினர். தீவிர மன அழுத்தத்தில் இருந்த நிமிடங்கள் கண் முன் வந்துபோகின்றன” என தெரிவித்துள்ளார்.