தனது அதிவேகமான ஓட்டத்தால் மின்னல் மனிதன் என்று அழைக்கப்படுபவர் ஜமைக்காவின் உசைன் போல்ட். ஒலிம்பிக்கில் எட்டு முறை தங்கப்பதக்கம் வென்ற உசைன் போல்ட் தற்போது அதிலிருந்து ஓய்வுபெற்று, கால்பந்தாட்ட வீரருக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில் பூஜ்ஜிய புவி ஈர்ப்பு விசை சூழலில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பிரான்சின் ஏர் பஸ் 310 விமானத்தின் மூலம் வானில் பறந்த உசைன் போல்ட், சக பயணிகளுடன் சேர்ந்து ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டார்.
ஓட்டத்திற்காக தயாராகும் போல்ட் உள்ளிட்ட மூவர், விசில் அடிக்கப்பட்டதும் ஓடத் தொடங்குகின்றனர். உடல் எடை கிட்டத்தட்ட பூஜ்ஜிய நிலையை அடைந்துவிட்ட சூழலில், மூவரும் தத்தித் தத்தி இலக்கை நோக்கி ஓடுகின்றனர். இந்த நிலையிலும், உசைன் போல்ட் அவ்வப்போது தன் கால்களை தரையில் ஊன்றி வேகமாக ஓடியதோடு, இலக்கை எட்டியும் தொடக்கப் பகுதிக்கு வந்தும் பந்தயத்தில் வெற்றி பெற்றார்.
இந்த பந்தயத்திற்கான வீடியோ மற்றும் புகைப்படங்கள் போல்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கேட்டபோது மிட்டாய்க் கடைக்குள் நுழைந்த சின்னக் குழந்தை போல இந்த அனுபவம் எனக்கு இருந்தது என தெரிவித்துள்ளார்.