4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையில் களம் இறங்கியது. அதில் 9 லீக் போட்டிகளில் களம் இறங்கி 4 போட்டிகளில் வெற்றி, 5 போட்டிகளில் தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தை பிடித்தது. இதனால் அரையிறுதி சுற்றுக்கு கூட பாகிஸ்தான் அணி முன்னேற முடியவில்லை. அதே சமயம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது, அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார். அனைத்து வகை கிரிக்கெட்டுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பொறுப்பை வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி. பாகிஸ்தான் அணிக்கு புதிதாக வரும் கேப்டனுக்கு பேட்ஸ்மேனாக எனது முழு அர்ப்பணிப்பையும் வழங்குவேன் எனவும் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கேப்டன் பொறுப்பு வகித்து வந்த பாபர் அசாம் ஒரு நாள் போட்டிகளில் 42 போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பு வகித்து அதில் 26 வெற்றிகளும், 14 தோல்விகளும் பெற்றுள்ளார். ஒரு ஆட்டம் டையிலும், ஒரு ஆட்டம் முடிவில்லாமலும் போனது. டெஸ்ட் போட்டிகளில் 20 போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பு வகித்து அதில் 10 வெற்றிகளும், 6 தோல்விகளும் பெற்றுள்ளார். டி20 போட்டிகளில் 71 போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பு வகித்து அதில் 42 வெற்றிகளும், 22 தோல்விகளும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.