13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில், டெல்லி அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டியின் போது, பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி பிசிசிஐ விதித்திருந்த கரோனா தடுப்பு நடவடிக்கை விதிகளை மீற முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையே ஐபிஎல் தொடர் நடைபெறுவதால், பிசிசிஐ பல கட்டுப்பாட்டு விதிகளை விதித்திருந்தது. அதன்படி, வீரர்கள் பந்துகளில் பௌலிங் செய்யும் போதோ அல்லது ஃபீல்டிங் செய்யும் போதோ எச்சில் தடவுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இது வீரர்கள் வழக்கமாக ஈடுபடும் செயல் என்பதால், இது எந்த அளவிற்கு பின்பற்றப்படும் என்ற கேள்வி எழுந்தது. நேற்றைய போட்டியின் மூன்றாவது ஓவரின் போது டெல்லி அணி வீரர் பிரித்தீவ் ஷா அடித்த பந்தை தடுத்த விராட் கோலி, அதில் எச்சிலைத் தடவ முயன்றார். பின்னர் நொடிப்பொழுதில் சுதாரித்த விராட் கோலி, தெரியாமல் செய்ய முயற்சித்து விட்டேன் என்கிற பாணியில் சிரித்தவாறே ஆட்டத்தைத் தொடர்ந்தார்.
ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ராஜஸ்தான் அணி வீரர் உத்தப்பா, பந்தில் எச்சிலைத் தடவி கரோனா தடுப்பு விதிகளை மீறியது குறிப்பிடத்தக்கது.