வங்காளதேசத்திடம் முதன்முறையாக தோற்ற ஆஸ்திரேலிய அணி!
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, தாக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அதிர்ச்சித் தோல்வி யடைந்துள்ளது.
ஆகஸ்ட் 27-ஆம் தேதி தாக்கா மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் சார்பில் தமிம் இக்பால் 71, சகிப் அல் ஹசன் 84 ரன்களும் எடுத்திருந்தனர். வங்காளதேசம் அணி 260 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 217 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் சார்பில் ரென்சாவ் 45, அகர் 41 ரன்களும் எடுத்திருந்தனர்.
இரண்டாம் இன்னிங்க்ஸில் வங்காளதேசம் அணி 43 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கி 221 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் சார்பில் வார்னர் மட்டும் 112 ரன்கள் எடுத்திருந்தார்.
சகிபின் சுழலில் சிக்கி வார்னர் வெளியேறிய பின், அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மன்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். பேட் கம்மின்ஸின் அதிரடி ஆட்டம் நம்பிக்கையைக் கொடுத்தாலும், மறுபுறம் ஆடிய நாதன் லயன் மெகதி ஹசனிடம் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
இதன்மூலம், ஆஸ்திரேலிய அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணி வீழ்த்தியது. டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம் அணியிடம் தோற்பது வரலாற்றிலேயே முதன்முறையாகும்.
இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சேர்த்து 12 விக்கெட்டுகளை வீழ்த்திய சகிப் அல் ஹசன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.