ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பேஸ் ஒன் பகுதியில் தனியார் தொழிற்சாலை ஜாய் ஃபோம்(JOY FOAM) செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் மெத்தை, தலையணை, சோபா உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கத் தேவைப்படும் ஃபோம் தயார் செய்யப்படுகிறது.
இந்நிலையில் ஃபோம் தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது . சிறிது நேரத்தில் மளமளவெனக் கொழுந்துவிட்டு எரிந்த தீயை கண்ட தொழிற்சாலை காவலாளி சிப்காட் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் விரைந்து வந்த சிப்காட், ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக எறிந்த தீயினை தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் தயார் செய்யப்பட்ட ஃபோம் வைக்கப்பட்டிருந்த மூன்று குடோன்கள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும், இதில் சுமார் பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஃபோம் எரிந்து நாசமானதாக தொழிற்சாலை நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது. அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து என்பதாலும் பணியில் யாரும் இல்லாத காரணத்தினாலும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.