ஊரடங்கு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி இன்ஸ்டகிராம் மூலமாக ரூ. 3.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளார்.
உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், இந்த காலகட்டத்தில் அதிகம் வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் பட்டியலை அட்டெய்ன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மார்ச் 12 முதல் மே 14 வரை இன்ஸ்டகிராம் மூலமாக அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் இந்த பட்டியலில், ரூ. 17.19 கோடி வருவாயுடன் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் மெஸ்ஸி, நெய்மர் ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். 10 விளையாட்டு வீரர்களை கொண்ட இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய விளையாட்டு வீரர் கோலி ஆவார். கோலி இந்த ஊரடங்கு காலத்தில் மட்டும் இன்ஸ்டாகிராம் மூலமாக ரூ. 3.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். ஊரடங்கு காலகட்டத்தில் இன்ஸ்டாகிராமில் வெறும் 3 விளம்பர பதிவுகளை மட்டுமே கோலி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.