களத்தில் இருந்து வெளியேறியபோது, காயத்தின் வலி அதிகமாக இருந்தது என டெல்லி அணியின் பந்து வீச்சாளர் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த அஷ்வின், இந்தாண்டு டெல்லி அணிக்காக விளையாடுகிறார். இவ்வணியை ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும், ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராகவும் இருந்து வழிநடத்துகின்றனர். டெல்லி அணி முதல் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற அப்போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. அப்போட்டியின்போது, அஷ்வின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு பாதியில் வெளியேறினார். இந்நிலையில், அஷ்வின் காயத்தின் தன்மை குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர், "களத்தில் இருந்து வெளியேறும்போது அதிகமான வலி இருந்தது. தற்போது காயத்தின் தீவிரம் குறைந்துவிட்டது. மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளும் சாதகமாக வந்திருக்கின்றன. அனைவரது அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.
டெல்லி அணி தன்னுடைய இரண்டாவது போட்டியில், சென்னை அணியை வரும் 25-ம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது.