எனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு இந்திய அணியில் சரியாக கிடைக்கவில்லை என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆதங்கப்பட்டுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா கடந்த 2016-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடி வந்தார். அதன்பிறகு, அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அவர் இந்திய அணிக்காக இதுவரை 10 டி20 போட்டிகள், 22 டெஸ்ட் போட்டிகள், 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் அமித் மிஸ்ரா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். மேலும், ஐபிஎல் தொடர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர், மொத்தம் 148 போட்டிகளில் விளையாடி 157 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காதது குறித்து மனம் திறந்துள்ளார்.
அதில் அவர், "நான் குறைத்து மதிப்பிடப்படுகிறேனா என்று தெரியவில்லை. முன்னரெல்லாம் இதுகுறித்து அதிகமாக யோசித்திருக்கிறேன். அது என் சிந்தனையை வேறு திசைக்கு இழுத்து செல்லும். தற்போது அதையெல்லாம் விடுத்து, என் வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், எனக்கு என்ன கிடைத்திருக்க வேண்டுமோ அது கிடைக்கவில்லை. மக்களுக்கு அமித் மிஸ்ரா என்று கூறினால் அது யாரென்று தெரியும். அது எனக்கு போதும்" எனக் கூறினார்.