இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, கிரிக்கெட் களத்தையும் கடந்து பல இடங்களிலும் தனது ரசிகர்களையும், தன்னை சுற்றி உள்ளவர்களையும் ஆச்சரியப்படுத்துவது வழக்கமே. அந்த வகையில் தோனி குறித்த வெளிவராத செய்தி ஒன்றை இந்திய அணியின் முன்னாள் நிர்வாக மேலாளர் சுனில் சுப்ரமணியன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
தமிழக வீரரும் இந்திய அணியின் முன்னாள் நிர்வாக மேலாளருமான சுனில் சுப்ரமணியன் விளையாட்டு இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 2017ல் நடைபெற்ற சுவாரசிய சம்பவம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். அந்த பேட்டியில் தோனி குறித்து பேசிய அவர், "டிசம்பர் 2017-ல் இலங்கைக்கு எதிரான தரம்சலா ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்து துவண்டிருந்தது இந்திய அணி. அப்போது அன்றிரவு எட்டு மணியளவில் கடும் குளிரில் இந்திய அணியினர் தீமூட்டி அதைச் சுற்றி அமர்ந்துகொண்டு அந்தாக்ஷரி விளையாடினர். அப்போதும் தோனியே அங்கு அனைவரையும் கவர்ந்தார். 1970, 1980 களில் வெளியான பல இந்தி பாடல்களை தோனி மிகச்சரியாக, அழகாக பாடினார்.
1950-களின் சில பாடல்களையும் அவர் பாடினார். கிஷோர் குமார், முகமட் ரஃபி, முகேஷ் என நீங்கள் யார் பெயரை கூறினாலும், தோனி கைவசம் பாடல்களை வைத்திருப்பார். கணீரென்று ஒலிக்கும் தோனியின் குரல் அனைவரையும் கட்டிப்போட்டது. அதிகாலை 2 மணி வரை பாடிக்கொண்டேதான் இருந்தோம். இலங்கையிடம் அடைந்த தோல்வியின் வலி அகன்றது. புத்துணர்வு அடைந்தோம். பிறகு அந்த தொடரையும் வென்றோம்" என தெரிவித்துள்ளார்.