உலகம் முழுவதும் கரோனா பீதி உச்சத்தில் இருக்கின்றது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது 170 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தாக்குதல் ஐரோப்பிய நாடுகளை தீவிரமாக பாதித்து வருகின்றது. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இதன் பாதிப்பு உச்சத்தில் இருக்கின்றது. இந்தியாவில் இதுவரை 600க்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரைக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்கள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்றது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலி 50 லட்சம் மதிப்பிலான அரிசியை ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அம்மாநில மக்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.