இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.
அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் அவர் பதிவிடுவது வழக்கம்.
இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.