இந்திய கிரிக்கெட் அணியில் நீண்டகாலமாக ஓப்பனிங் செய்பவர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான். பல சமயங்களில் இந்த இணை அதிரடியாக ஆடி எதிரணியை மிரளவைத்தாலும், சில சமயங்களில் சொதப்பலாக ஆடி இந்திய அணியையே அலறவைத்திருக்கிறது. இங்கிலாந்தில் நடந்துகொண்டிருக்கும் டி20 தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் இந்த இணை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக ஆடவில்லை.
ரோகித் சர்மா 50 ஓவர் போட்டிகளில் தனக்கே உரிய பாணியில் ஆடுபவர். ஷிகர் தவானோ தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டுபவர். இந்த இருவரும் மாற்று இடங்களில் விளையாடி, தொடக்க வீரர்களாக வேறுசிலர் இறங்கினால் அணி இன்னும் பேலன்ஸாக இருக்கும் என்ற எண்ணத்தில் ஐந்து வீரர்களைத் தேர்வுசெய்துள்ளோம். இந்த லிஸ்டில் யாரேனும் விடுபட்டால், கமெண்டில் உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.
அம்பத்தி ராயுடு
எட்டு வருடங்களாக மும்பை அணியில் இருந்திருந்தாலும், சென்னை அணிக்கு வந்தபிறகு ஏக மவுசு கிடைத்த வீரர். அதற்கேற்ற உழைப்பையும், விளையாட்டையும் வெளிப்படுத்தி நடந்துமுடிந்த ஐ.பி.எல். சீசனில் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர். யோ-யோ டெஸ்ட் மூலம் இங்கிலாந்து டூருக்கு தேர்வாகாதபோது, அவரைவிட பல ரசிகர்கள் அப்செட் ஆனதே இவர் மீதுள்ள நம்பிக்கைக்கு அடையாளம்.
சஞ்சு சாம்சன்
இந்திய அணியின் எதிர்கால வீரர்களில் ஒருவர் என்று வர்ணிக்கப்பட்டவர். தோனி இடத்தைத் தக்கவைத்துக் கொள்வார் என்ற பாராட்டுகளுக்கு ஏற்றபடி விளையாடக்கூடியவர். 2015ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினாலும் அதிரடி காட்டததால், அணியில் மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. களத்தில் அதிரடி தேவைப்படும் சமயங்களில் தயங்காமல் செயல்படும் நம்பிக்கைக்குரிய நபர்.
ரிஷப் பாண்ட்
நடந்துமுடிந்த ஐ.பி.எல். சீசனில் பெரிதும் ஏமாற்றிய டெல்லி அணியில் விளையாடிய ரிஷப் பாண்ட், ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியவர். வெறும் 20 வயதில் விறுவிறுப்பான ஆட்டம், பேட் வேகம் என பல நுணுக்கங்களில் அதிரடி காட்டும் ரிஷப் பாண்ட், இந்தியாவின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்களில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடக்கூடியவர் என்பதால், தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கலாம்.
கே.எல்.ராகுல்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயிலுடன் இணைந்து அந்த அணியின் ஒட்டுமொத்த ரன்களில் 60 சதவீதத்தை விளாசியவர். முறை மற்றும் முறையற்ற காம்பினேஷன்களில் ஷாட்களை ஒருங்கே ஆடுவதால், தொடக்கவீரராக களமிறங்கும்போது கூடுதல் பலமாக இருக்கலாம். தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடினால் அடுத்தடுத்து இறங்கும் கோலி, ரெய்னா போன்ற வீரர்களுக்கு வேலை சுலபமாகிவிடும். இந்திய அணியின் இளம் பேக்கேஜில் முக்கியமானவர்.
விராட் கோலி
எப்போதும் மூன்றாவது வீரராக களமிறங்குவதை பார்த்து பழகிவிட்டோம். தொடக்க ஆட்டக்காரராக பெரிதும் சோதிக்காதவர் (7 போட்டிகளில் வெறும் 28 ரன்கள்) என்றாலும், ஐ.பி.எல். போட்டிகளில் பெங்களூரு அணிக்காக ஓப்பனிங்கில் கலக்கியிருக்கிறார். நிதானமும், ஆக்ரோஷமும் கலந்த இவரது பேட்டிங் மூலம் அணியின் ரன்கள் தொடங்கினால், எதிரணிக்கு கொஞ்சம் கடினமான இலக்கை நிர்ணயம் செய்யும் வாய்ப்பு அணிக்கு கிடைக்கலாம்.