இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ட்ரெண்ட் ப்ரிட்ஜில் வைத்து நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 268 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் சார்பில் குல்தீப் யாதவ் 6 விக்கெட் எடுத்திருந்தார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி இலக்கை சுலபமாக வெற்றிபெற்றது. ரோகித் சர்மா 137 ரன்களும், விராட் கோலி 75 ரன்களும் எடுத்திருந்தார்.
இந்த வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது தந்து கவுரவிக்கப்பட்டார். விருதைப் பெற்ற பின் பேசிய அவர், ‘எனக்கு இது மிகப்பெரிய நாள். தொடக்கத்திலேயே சிறப்பாக பந்துவீசினேன். அதனால்தான், முதல் இரண்டு ஓவர்களிலேயே விக்கெட்டுகள் வீழ்ந்தன. சுழற்பந்து வீச்சைப் பொருத்தவரை பந்து திரும்புவது மட்டுமே போதுமானது. அது நடந்ததால் நம்பிக்கை அதிகரித்தது. பந்தை வெவ்வேறு இடத்தில் மாறுபட்ட வேகத்தில் வீசும்போது பேட்ஸ்மென்களை சுலபமாக திணறடிக்க முடியும். மைதானத்தின் நீள அகலங்கள் வெற்றியைத் தீர்மானிக்கப் போவதில்லை. டெஸ்ட் போட்டியில் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. எதிர்பார்க்கலாம்’ என தெரிவித்துள்ளார்.
டி20 தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி அதிரடியாக வெற்றிபெற்றது. அதில் குல்தீப் யாதவ்வின் செயல்பாடு, இங்கிலாந்து வீரர்களை அடுத்த இரண்டு போட்டிகளில் உஷாராக இருக்கச் செய்தது. தற்போது ஒருநாள் போட்டியிலும் அவர் சிறப்பாக பந்துவீசுவதால், டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.