கிரிக்கெட் போட்டியில் ஒரு அணியை சேர்ந்த அனைத்து பேட்ஸ்மேன்களும் டக் அவுட் ஆன சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
![all players of kerala kasargodu women cricket team got out for zero runs](http://image.nakkheeran.in/cdn/farfuture/4rwdERicHn9D5rWqW0vkngQ0Gr03MlMq1IXJ9Tt48_o/1558068937/sites/default/files/inline-images/ground-std.jpg)
கேரளா மாநில அளவிலான 30 ஓவர் கிரிக்கெட் போட்டியில் காசர்கோடு மற்றும் வயநாடு மகளிர் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய காசர்கோடு அணி, ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தனது விக்கெட்டுகள் அனைத்தையும் இழந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் இறுதி ஆட்டக்காரர்கள் வரை அனைவருமே 0 ரன்னில் வெளியேறினார். இதில் மற்றொரு சுவாரசியம் அனைவருமே போல்ட் ஆகி அவுட் ஆனது தான்.
அனைவருமே 0 ரன்களில் அவுட் ஆன நிலையில் எக்ஸ்ட்ராஸ் மூலமாக அந்த அணிக்கு நான்கு ரன்கள் கிடைத்தது. இதனையடுத்து 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அடுத்து விளையாடிய வயநாடு அணி 5 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோல்விக்கு பின்னர் பேசிய காசர்கோடு கேப்டன், " இது மிகவும் துரதிஷ்டமான ஒன்று. எங்கள் அணிக்கு பயிற்சியாளர் கூட கிடையாது. நாங்களே தான் எங்களுக்கு தெரிந்தவற்றை பயிற்சி செய்தோம். இந்த ஆட்டம் எப்படி இருந்தாலும், எதிர்காலத்தில் சிறப்பான அணியாக நாங்கள் வருவோம்" என தெரிவித்தார். மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாட கூடிய கேரள மாநில மகளிர் அணி கடந்த 2017 ஆம் ஆண்டு நாகலாந்து அணியை 2 ரன்களில் சுருட்டியது குறிப்பிடத்தக்கது.