இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், உலக கிரிக்கெட் ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படுபவருமான சச்சின் தெண்டுல்கருக்கும், சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்திற்கும் இடையே உள்ள தொடர்பு என்னவென்று தெரியுமா உங்களுக்கு?
கிரிக்கெட்டின் அனைத்து விதமான ஃபார்மேட்டுகளிலும் சேர்த்து நூறு சர்வதேச சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற உலக சாதனை படைத்தவர் சச்சின் தெண்டுல்கர். அவர் அடித்த அந்த நூறு சதங்களில் 42 இந்திய மண்ணில் அடிக்கப்பட்டவை. அந்த 42 சதங்களில் சச்சின் தெண்டுல்கர் அடித்த முதல் சதம் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில்தான். 1993ஆம் ஆண்டு, பிப்ரவரி 12 அன்று இங்கிலாத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சச்சின் 165 (296) ரன்கள் அடித்திருந்தார்.
மேலும், இந்த 42 சதங்களில் 5 சதங்கள் சென்னை மைதானத்தில் அடிக்கப்பட்டவை. சச்சின் தெண்டுல்கர் இந்திய மண்ணில் ஒரே மைதானத்தில் அதிகப்படியான சதங்கள் அடித்ததும் சென்னையில்தான். இதில் சுவாரஸ்யமே, இந்த 5 சதங்களுமே டெஸ்ட் போட்டியில் விளாசப்பட்டவை என்பதுதான்.