உலகின் தலைசிறந்த ஒருநாள் போட்டி வீரர் என இந்திய அணியின் கேப்டனான விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய வீரர் ஆரான் பின்ச் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. இரு அணி வீரர்களும் இத்தொடருக்காகத் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர்.
ஒருநாள் மற்றும் இருபது ஓவர் தொடர்களில் முழுமையாகப் பங்கெடுக்கவுள்ள விராட் கோலி, டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்குப் பின் இந்தியா திரும்பவுள்ளார். இதனால், எஞ்சியுள்ள போட்டிகளை துணைக் கேப்டன் ரஹானே தலைமையில் இந்திய அணி விளையாடவுள்ளது.
ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஆரோன் பின்ச், எதிர்வரவிருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான தொடர் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில், இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி குறித்துப் பேசுகையில், "விராட் கோலியின் சாதனைகளை எடுத்துப் பார்த்தால் அனைத்திலும் அது முதன்மையாக உள்ளது. இது குறிப்பிடத்தக்க ஒன்று. விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்யவேண்டும் என்பதே தொடர்ந்து எங்கள் நினைவில் நிறுத்த வேண்டியது என்று நினைக்கிறேன். அதிலிருந்து விலகிவிட்டால் அவருக்கு எதிரான யுக்திகளைத் தவறவிடுவோம். அவர் உலகின் தலைசிறந்த ஒருநாள் போட்டி வீரர். ஆகையால், சரியாகத் திட்டம் வகுத்து அதைச் செயல்படுத்துவதில்தான் அனைத்தும் உள்ளது" எனக் கூறினார்.