ஐபிஎல் உரிமையாளர்கள், 6 இங்கிலாந்து கிரிகெட் வீரர்களிடம் தங்கள் அணிகளில் விளையாட ஆண்டுக்கு ரூ.50 கோடி பேரம் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 கிரிக்கெட் அணிகளை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள், 6 இங்கிலாந்து வீரர்களை அணுகி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் கவுண்டி கிரிக்கெட்களில் இருந்து விலகி முழுவதுமாக தங்கள் ஐபிஎல்லில் சேர்ந்து விளையாட தொடக்க நிலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். வீரர்களிடம் ஆண்டுக்கு ரூ.50 கோடி ஊதியமாக பேசியுள்ளதாகவும் லண்டன் டைம்ஸ் இதழ் கூறியுள்ளது.
இருப்பினும் எந்த அணிகளின் உரிமையாளர்கள் இம்முயற்சியில் ஈடுபட்டனர், அவர்கள் அணுகிய வீரர்கள் யார் என்பன போன்ற விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்), தென்னாப்பிரிக்காவின் டி20 லீக், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நடைபெறும் குளோபல் டி20 லீக் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் மேஜர் லீக் டி20 போன்ற பல லீக்குகாள் உலகம் முழுதும் நடைபெறும் சூழலில் ஐபிஎல் அணிகள் இம்முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு லீக்கிலும் தங்கள் அணிகளின் பலத்தினை உறுதி செய்யவும் வீரர்களின் இருப்பை உறுதி செய்யவும் இப்புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.