1928-ஆம் ஆண்டு முதல் 1980-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 11 ஒலிம்பிக் போட்டிகளில் 11 முறை பதக்கம் வென்றது. இதில் 8 முறை தங்கம் வென்று இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் அசைக்க முடியாத அணியாக வலம்வந்தது. அதற்கு பிறகு நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு பதக்கம்கூட வெல்லாதது வேதனையான ஒன்று. சமீப காலங்களாக ஒலிம்பிக் போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணி டீம் கேமில் எதிர்பார்த்த அளவிற்கு பங்களிக்கவில்லை. இந்த நிலையில் ஷூட்டிங்கில் ஜூனியர் மற்றும் சீனியர் வீரர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவது, ஷூட்டிங்கில் ஒலிம்பிக் பதக்கங்களை இந்திய வீரர்கள் பெறுவார்கள் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.
2020-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்யோவில் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் ஒரு சில பதக்கங்களை மட்டுமே பெற்றுவரும் இந்திய அணி இந்தமுறை பதக்க வேட்டையை நடத்த வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். 2004-லிருந்து 2016 வரை நடந்த 4 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 12 பதக்கங்கள் வென்றுள்ளது. இதில் ஷூட்டிங் பிரிவில் 1 தங்கம் உட்பட 4 பதக்கங்கள் பெற்றுள்ளது. 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா முதல் முறையாக தங்கம் வென்று தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இன்டர்நேஷனல் ஷூட்டிங் ஸ்போர்ட்ஸ் ஃபேடரேஷன் உலகக்கோப்பை தொடர் பிப்ரவரி 20 முதல் 28-ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்றது. இந்த தொடரின் வெற்றி மூலம் 2020-ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் தகுதி பெற முடியும். இதில் ஆண்கள் பிரிவில் இந்திய அணியை சேர்ந்த இளம் வீரரான சௌரப் சவுத்ரி 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். பெண்கள் பிரிவில் அபுர்வி சண்டேலா 10 மீ ஏர் ரைஃபில் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். கலப்பு இரட்டையர் பிரிவில் சௌரப் சவுத்ரி மற்றும் மனு பாகர் தங்கம் வென்றுள்ளனர். புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 3 தங்கம் வென்று முதலிடத்தில் உள்ளது.
இந்திய அணியின் ஜூனியர் ஷூட்டிங் பயிற்சியாளரான ஜஸ்பால் ராணா வீரர்கள் தொலைபேசி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவினை பின்பற்ற வேண்டும் என்று ஜஸ்பால் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ்.எஸ்.எப் உலகக்கோப்பையில் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற 16 வயதே ஆன சௌரப் சவுத்ரி உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர். 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்க பதக்கம் வென்றார். இளம் வயதில் ஆசிய கோப்பை போட்டியில் தங்கம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்தார். ஐ.எஸ்.எஸ்.எப். உலக சாம்பியன்ஷிப், ஐ.எஸ்.எஸ்.எப். உலகக் கோப்பை, யூத் ஒலிம்பிக் விளையாட்டுக்கள், ஆசிய விளையாட்டுக்கள் மற்றும் ஆசிய ஏர் துப்பாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர் இவர்தான்.
ஐ.எஸ்.எஸ்.எப் உலகக்கோப்பையில் 10 மீ ஏர் ரைஃபில் பிரிவில் தங்கம் வென்ற அபுர்வி சண்டேலா ஜெய்ப்பூரை சேர்ந்தவர். அபுர்வி சண்டேலா 2012-ஆம் ஆண்டு டெல்லியில் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் 10 மீ ஏர் ரைஃபில் பிரிவில் தங்க பதக்கம் வென்றார். 2014-ஆம் ஆண்டு இன்டர்ஷூட் சாம்பியன்ஷிப் போட்டியில் நான்கு பதக்கங்களை வென்றார். இதில் இரண்டு பதக்கம் தனியாகவும், இரண்டு பதக்கம் அணியாகவும் வென்றார். அதே ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றார்.
ஐ.எஸ்.எஸ்.எப் உலகக்கோப்பையில் கலப்பு இரட்டையர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற மனு பாகர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். மனு பாகர் மெக்ஸிக்கோவில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப். உலகக்கோப்பை போட்டியில் பெண்கள் பிரிவில் 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். உலகக்கோப்பையில் தங்கப்பதக்கம் வென்ற இளம் இந்திய வீரர் மனு பாகர் ஆவார். மனு பாகர் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் அணியில் ஓம் பிரகாஷ் மிதார்வால் உடன் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப். உலகக் கோப்பை போட்டியில் தனது இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றார்.
இந்திய அணி துப்பாக்கி சுடுதலில் முன்னேற்றம் கண்டு வருவதற்கு முன்னாள் பயிற்சியாளரான லோசோ சசுசக் ஒரு முக்கிய காரணம். அஞ்சலி பாக்வாட், அபினவ் பிந்த்ரா, தேஜஸ்வினி சாவந்த், ககன் நரங் ஆகியோருக்கு வெற்றிகரமாக பயிற்சி அளித்துள்ளார். 1998 முதல் 2000-ஆம் ஆண்டு வரையும், பின்னர் 2004 முதல் 2009 வரையான காலங்களிலும் சசுசக் இரண்டு முறை வெற்றிகரமாக இந்திய அணிக்கு பயிற்சி அளித்துள்ளார்.
ஏர் ரைஃபில் பிரிவில் சிறந்த வீரர்கள் பெரும்பாலும் 50 மீ பிரிவில் கலந்து கொள்வதில்லை. இது மிகவும் மோசமான ஒன்று. இந்திய அணியில் நல்ல திறமை வாய்ந்த ஏர் ரைபில் துப்பாக்கி சுடும் வீரர்கள் இருந்தபோதும் ஒரு சில பிரிவுகளில் சற்று பின்வாங்குகின்றனர். குறிப்பாக பெண்கள் பிரிவில் இது சிறிது பலவீனமாக உள்ளது என்று சசுசக் தனது கருத்தை கூறியுள்ளார்.
“காலையில் நன்றாக இருக்கும். ஆனால் துப்பாக்கி சுடுதல் போட்டியின்போது வீரர்கள் ஆட்டத்தை ஆரம்பிக்கும் நேரத்தில் காற்று வந்துவிடும். கடினமாக இருக்கும். எளிதான நிகழ்வு அல்ல. உலகில் ஒரு 10000 நல்ல ஏர் ரைஃபில் வீரர்கள் உள்ளனர். ஆனால் துல்லியமாக ஸ்மால் ஃபோர் சுடுபவர்கள் 100 மட்டுமே " என்று சசுசக் தற்போதைய இளம்வீரர்கள் பற்றி தெரிவித்துள்ளார்.
வரும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிட்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஷூட்டிங், பளு தூக்குதல் போன்ற விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.