இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர். மணீஷ் பாண்டே 50 ரன்களும், டோனி 49 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 375 ரன்கள் குவித்தது.
இதை தொடர்ந்து, இலங்கை அணியினர் 376 ரன்களை இலக்காக கொண்டு விளையாடினர். அந்த அணியில் மேத்யூஸ் 70 ரன்களும், சிரிவர்தனா 39 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணி, 43 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம், இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்திய அணி பந்துவீச்சில் பும்ரா, பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர். 131 ரன்கள் விளாசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆட்டநாகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நடந்து முடிந்துள்ள நான்கு போட்டிகளையும் இந்திய அணி வென்றுள்ளது. இரு அணிகளுக்கிடையேயான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, செப்டம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது.