இந்த வருட ஐபிஎல் தொடரில் 18 போட்டிகளில் வெற்றி தோல்விகள் கடைசி ஓவரில் தீர்மானிக்கப்பட்டன. இமாலய சிக்ஸர்கள், அதிரடி சதங்கள், ஹெலிகாப்டர் ஷாட்கள் என அதிரடி பேட்டிங் களைகட்டியது.
வழக்கம்போல கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுத்ததில் தோனி முதல் இடத்தில் உள்ளார். 24 பந்துகளில் 74 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் 308.3, 8 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அடுத்து பெங்களூர் வீரர் ஸ்டோனிஸ் 20 பந்துகளில் 66 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் 330, 5 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஹார்திக் பாண்டியா 23 பந்துகளில் 66 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் 287, 8 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி உள்பட 18 போட்டிகள் கடைசி ஓவர் த்ரில்லிங் கொண்டிருந்தது. சூப்பர் ஓவர் மூலம் 2 போட்டிகளில் முடிவு தெரிந்தது. 10 ரன்களுக்கும் குறைவாக 4 போட்டிகளில் அணியின் வெற்றி தோல்விகள் இருந்தன.
மொத்தம் 60 போட்டிகளில் 19416 ரன்கள், 785 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. அதிகபட்சமாக கொல்கத்தா அணி 232/2 ரன்களும், குறைந்தபட்சமாக பெங்களூரு அணி 70/10 ரன்களும் எடுத்தன.
தோனி 12 இன்னிங்ஸ்களில் 416 ரன்கள், 134.63 ஸ்ட்ரைக் ரேட் கொண்டு சென்னை அணியின் பேட்டிங் யூனிட்டை பலப்படுத்தியுள்ளார். தோனி அதிகபட்ச சராசரியாக 83.20 கொண்டு விளையாடியுள்ளார். 7 முறை 30+ ரன்கள் அடித்து சில போட்டிகளில் சென்னை அணியின் வெற்றிக்கு தனி ஒருவனாய் போராடினார்.
தோனி 111 மீட்டர் இமாலய சிக்ஸர் அடித்து அசத்தியுள்ளார். மும்பை அணியின் பொல்லார்ட் பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரே போட்டியில் 10 சிக்ஸர்கள் அடித்து ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்துள்ளார். மும்பை வீரர் ஹார்திக் பாண்டியா 17 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்தார்.
இந்த சீசனில் டெல்லி அணி அதிக பவுண்டரிகள் (236) அடித்துள்ளது. கொல்கத்தா அணி 143 சிக்ஸர்கள் அடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 6 சதங்கள், 106 அரைசதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வீரர்கள் ஒரு அணிக்கு நான்கு பேர் விளையாடும் நிலையில் 13 முறை 4-க்கும் குறைவாக வெளிநாட்டு வீரர்கள் விளையாடியுள்ளனர். அதிகமாக வீரர்களை மாற்றியதில் பஞ்சாப் அணி முதல் இடத்தில் உள்ளது. 32 முறை மாற்றியுள்ளது.
டெத் ஓவர்களில் அதிரடிக்கு பஞ்சமில்லாத நிலையில் கடைசி 3 ஓவர்களில் 13 முறை 50+ ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. இதுவரை விளையாடிய ஐபிஎல் சீசன்களில் கடைசி 3 ஓவர்களில் அதிக முறை 50+ ரன்கள் எடுத்தது இந்த ஐபிஎல் தொடரில் தான்.
சென்னை அணி கடந்த ஆண்டு ஒவ்வொரு 13 பந்துகளுக்கும் ஒரு சிக்ஸ் அடித்தது. ஆனால் இந்த ஆண்டு 22 பந்துகளுக்கு ஒரு சிக்ஸ் அடித்துள்ளது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 9 பந்துகள் அதிகம் எடுத்துக்கொண்டது.
ஹைதராபாத் அணியின் வார்னர் கடந்த 5 சீசனில் 500+ ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு கோலி 5 முறை 500+ ரன்கள் எடுத்த சாதனையை சமன் செய்துள்ளார். வெளிநாட்டு வீரர்களில் இதுவரை அதிக ரன்கள் எடுத்த கெயில் சாதனையை வார்னர் முறியடித்துள்ளார். 126 போட்டிகளில் வார்னர் 4706 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி எடுத்த ரன்களில் 50% ரன்கள் வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் எடுத்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக ஒப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் 100+ ரன்கள் 3 முறை வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் எடுத்துள்ளனர்.
கொல்கத்தா அணியின் ரஸுல் ஒவ்வொரு 4.79 பந்துகளுக்கும் ஒரு சிக்ஸ் அடித்துள்ளார். அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்டாக கொல்கத்தா அணியின் ரஸுல் 204.82 வைத்துள்ளார். குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டாக சென்னை அணியின் ராயுடு 93.07 கொண்டுள்ளார்.
அதிக டாட் பால் (சதவீதம்) செய்த வீரர்களில் வாட்சன் முதலிடத்தில் உள்ளார். ஒரு சில போட்டிகளில் மட்டுமே நன்றாக விளையாடிய வாட்சன் கிட்டத்தட்ட 47% டாட் பால் செய்துள்ளார். மொத்தமாக 299 பந்துகள் சந்தித்து 398 ரன்கள் எடுத்துள்ளார். சந்தித்த பந்துகளில் 142 பந்துகள் டாட் பால்கள். அதிகம் டாட் பால் செய்த வீரர்களில் பஞ்சாப் அணியின் கே.எல். ராகுல் 153 பந்துகளை டாட் செய்துள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஓப்பனிங் பேட்ஸ்மேன் வார்னர் இருந்து வந்தார். இந்த தொடரில் சிறப்பாக விளையாடியுள்ள வார்னர் 12 போட்டிகளில் 692 ரன்கள், 143.87 ஸ்ட்ரைக் ரேட், 69.20 சராசரி. இதில் 8 அரைசதங்கள், ஒரு சதம் அடித்துள்ளார். இந்த தொடரில் அதிக 2 ரன்கள் எடுத்தது வார்னர் தான். 63 முறை 2 ரன்கள் மற்றும் 195 சிங்க்ல்ஸ் எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது நான்கு முறை 3 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றார்.
டெல்லி அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் தவான் 64 பவுண்டரிகள் அடித்து அதிக பவுண்டரிகள் எடுத்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் ரஸுல் 52 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.