ஆசியக்கோப்பைத் தொடர் கடந்த ஆகஸ்ட் 28 ல் தொடங்கி செப்டம்பர் 11 வரை நடக்கிறது. 6 நாடுகளின் அணிகள் மோதும் இந்த போட்டியில் இறுதி ஆட்டம் செப்டம்பர் 11ல் நடக்கிறது. தொடரில் நேற்று நடந்த ஆறாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியும் ஹாங்காங் அணியும் மோதின.
இந்தியாவுடன் இதற்கு முன் நடந்த போட்டிகளில் இரு அணிகளும் தோல்வியே தழுவியது. இதனால் இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாகத் தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் 78 ரன்களும் இறுதியாக வந்த குஷ்தில் 15 பந்துகளில் சிக்ஸர்கள் உட்பட 35 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய ஹாங்காங் 10.4 ஓவர்களில் 38 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து படுதோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ஷதாப் கான் 2.4 ஓவர்கள் பந்து வீசி 4 விக்கெட்களை எடுத்தார். சிறப்பாகச் செயல்பட்ட பாகிஸ்தான் அணியின் முகம்மது ரிஸ்வான் ஆட்டநாயகன் விருதை வென்றார். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது. நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுகின்றன.