டோக்கியோ ஒலிம்பிக்ஸில் முதல்முறையாக பெண்களுக்கான ஸ்கேட்டிங் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 18 வயதிற்கு குறைவான மூன்று சிறுமிகள் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 13 வயதான மோமிஜி நிஷியா தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த 13 வயதான ரெய்சா லீல் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இந்தப் போட்டியில் வெண்கல பதக்கத்தையும் ஜப்பானே வென்றுள்ளது. அந்த நாட்டைச் சேர்ந்த 16 வயதான ஃபூனா நகயாமா, வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.
இதற்கிடையே வாள் வீச்சுப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி, இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சிராக் ஷெட்டி - சத்விக் சைராஜ் இணை தோல்வியைத் தழுவியது. ஆடவர் டென்னிஸில் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல் தோல்வியடைந்தார். இந்திய ஆடவர் வில்வித்தை அணி, காலிறுதியில் தோல்வியடைந்துள்ளது.
அதேநேரத்தில் ஆடவர் டேபிள் டென்னிஸின் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் ஷரத் கமல் போர்த்துக்கீசிய வீரரை வென்றுள்ளார்.