2021ஆம் ஐபிஎல் தொடர் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தநிலையில், 2022 ஐபிஎல்க்கு முன்னர் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. புதிதாக இரண்டு அணிகள் களமிறங்கவுள்ளதால், இந்த மெகா ஏலத்தில் வழக்கத்தைவிட அதிக பரபரப்பு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மெகா ஏலத்தையொட்டி, ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள் நான்கு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தக்கவைக்கப்படும் நான்கு வீரர்களில் அதிகபட்சம் மூன்று பேர் இந்தியர்களாக இருக்கலாம் என்றும், அதிகபட்சம் இருவர் வெளிநாட்டவராக இருக்கலாம் என்றும் அந்த விதிமுறை கூறுகிறது.
இந்தச்சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை தக்க வைக்கவுள்ளதாகவும், வெளிநாட்டு வீரர்களில் பிராவோ அல்லது ஃபாப் டு பிளெசிஸை தக்க வைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி, இந்திய வீரர்களில் ரோகித் சர்மா, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோரையும், இஷான் கிஷன் அல்லது சூர்யா குமார் யாதவ் இருவரில் ஒருவரையும் தக்க வைக்கவுள்ளதாகவும், வெளிநாட்டு வீரர்களில் பொல்லார்டை தக்க வைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இந்தநிலையில் தற்போது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், சாஹல், தேவ்தத் படிக்கல் ஆகியோரை தக்க வைக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.