மஞ்சள் காமாலை என்பது நீண்ட காலமாக நாம் அறிந்த ஒரு நோய். பல்வேறு சிகிச்சை முறைகளின் மூலம் இதற்குத் தீர்வு இருக்கிறது என்று சொல்லப்பட்டாலும், இது குறித்த பல்வேறு சந்தேகங்கள் நமக்கு இன்னமும் இருக்கின்றன. அவையனைத்திற்கும் பிரபல டாக்டர் அருணாச்சலம் விடையளிக்கிறார்.
மனித ஈரல் பாதிக்கப்படுவதற்கான அறிகுறி தான் மஞ்சள் காமாலை. கண்கள் மஞ்சளாவது, பசியின்மை போன்ற பல்வேறு அறிகுறிகள் இதற்கு உள்ளன. சிறுநீர் மஞ்சளாக இருந்தாலே பயப்படுபவர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால், அந்த நேரங்களில் அதிகமாகத் தண்ணீர் குடித்து வெள்ளை நிறத்தில் சிறுநீர் வெளியேறினாலே பிரச்சனை முடிந்தது. காலை முதல் முறை வெளியேறும் சிறுநீர் மஞ்சளாக இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், தொடர்ந்து மஞ்சளாகவே சிறுநீர் வெளியேறினால் சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
தாங்களாகவே பரிசோதனை செய்யாமல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்வது தான் சரியானது. மஞ்சள் காமாலை வராமல் தடுப்பதற்கான தடுப்பூசிகளும் இருக்கின்றன. அது பெரும்பாலானோருக்கு குழந்தை பருவத்திலேயே செலுத்தப்படும். பலருக்கு உணவுப் பத்தியத்தின் மூலமே மஞ்சள் காமாலை நோய் சரியாகிவிடும். வேகவைத்த உணவுகளை மட்டும் அந்த நேரத்தில் சாப்பிட வேண்டும். சில தருணங்களில் குளுக்கோஸ் ஏற்றினாலும் மஞ்சள் காமாலை சரியாகிவிடும்.
மருந்துகள் கொடுத்தும் இரண்டாவது வாரமும் மஞ்சள் காமாலை குணமாகவில்லை என்றால் அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் மஞ்சள் காமாலை பாதிக்கும் அபாயம் இருக்கிறது. ஈரல் கெடுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். காரணமே இல்லாமலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த நோய் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. குறிப்பிட்ட கிருமிகள் தான் பாதிப்பிற்குக் காரணம் என்று தெரிந்தால் அந்தக் கிருமிகளை ஒழிப்பதற்கு மருந்துகள் வழங்கப்படும். சில மருந்துகளை நாம் எடுத்துக்கொள்வதாலும் ஈரல் கெடும் வாய்ப்புண்டு. மஞ்சள் காமாலை அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.